கொவிட் 2019: கப்பலிலிருந்து சிங்கப்பூரர்கள் ஐவர் இறங்க அனுமதி

கொவிட் 2019: கப்பலிலிருந்து சிங்கப்பூரர்கள் ஐவர் இறங்க அனுமதி

2 mins read
fff72433-c9ae-4547-9f7a-1ab9a261a815
'சேட்ஸ்' எனப்படும் சிங்கப்பூர் விமான நிலையத் தரைச் சேவைகள் பிரிவின் ஊழியர்கள் விமானத்துக்குள் தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்கின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஜப்பானின் யோக்கோஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'டைமண்ட் பிரின்சஸ்' சொகுசுக் கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சிங்கப்பூரர்கள் ஐவரும் அக்கப்பலிலிருந்து இறங்க அனுமதிப்பட்டுள்ளனர்.

இருப்பினும் அவர்கள் நாடு திரும்புவதற்கு முன் ஜப்பானிலேயே 14 நாட்களுக்குத் தங்க முடிவெடுத்திருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு நேற்று தெரிவித்தது.

"14 நாட்களுக்குள் அவர்கள் சிங்கப்பூர் திரும்பினால், கப்பலிலிருந்து தரையிறங்கிய தேதியில் இருந்து அவர்கள் ஐவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பது தற்போதைய கிருமித்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு விதிமுறை," என்று வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

அந்த ஐந்து சிங்கப்பூரர்களுக்கும் தோக்கியோவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் கப்பலில் தனிமைப்பட்டிருந்தபோது சிங்கப்பூரர்களுக்கு ஜப்பானிய அரசாங்கம் செய்த உதவிகளுக்கும் வெளியுறவு அமைச்சு தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது," என்றும் பேச்சாளர் கூறினார்.

அந்தக் கப்பலில் இருந்த பயணிகளில் 600க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கிருமித்தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது, சீனாவுக்கு வெளியே ஆக அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட சம்பவமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இருப்பினும், இந்தக் கப்பலில் அனைத்துலக பயணிகள் இருந்ததால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை ஜப்பானுடன் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

வெளிநாட்டுப் பயணிகள் கப்பலிலிருந்து இறங்கி, அவரவர் நாடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில், ஆஸ்திரேலியாவுக்கு கடந்த வியாழக்கிழமை சென்று சேர்ந்த அதன் குடிமக்கள் இருவருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலிய அரசாங்க அதிகாரிகள் கூறினர்.

மொத்தம் 170 ஆஸ்திரேலியர்கள் கப்பலில் இருந்து மீட்கப்பட்டனர் என்றும் அவர்களில் பாதிக்கப்பட்ட இருவரைத் தவிர மற்ற அனைவரும் 14 நாட்களுக்குத் டார்வின் நகரில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

'டைமண்ட் பிரின்சஸ்' சொகுசுக் கப்பலில் இன்னும் 1,000க்கும் மேற்பட்ட பயணிகள் இருக்கின்றனர்.

இந்தக் கப்பலில் 132 ஊழியர்கள், 6 பயணிகள் என இந்தியர்கள் 138 பேரும் உள்ளனர். இதில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.

தற்போது மேலும் ஓர் இந்திய ஊழியருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தோக்கியோவில் உள்ள இந்தியத் தூதரகம் கூறியுள்ளது.

இதன் மூலம் ஜப்பான் கப்பலில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை எட்டு ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே கிருமித்தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பயணிகளை கப்பலில் இருந்து வெளியேற்றும் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.