வீட்டில் இருக்கும் உத்தரவுக்கு சொந்த விடுப்பை எடுக்க ஊழியர்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது

வீட்டில் இருக்கும் உத்தரவுக்கு சொந்த விடுப்பை எடுக்க ஊழியர்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது

2 mins read
eff92d25-f0c7-476b-99d7-ccaf3f5e16d5
14 நாள் கட்டாய விடுப்பில் இருக்கும் அல்லது வீட்டில் இருக்கும் உத்தரவுக்கு சம்பளம் இல்லா விடுப்பை எடுக்கச் சொல்லி முதலாளிகள் ஊழியர்களை வற்புறுத்தக்கூடாது என்று மனிதவள அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.படம்: எஸ்டி -

கிருமித்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றான 14 நாள் கட்டாய விடுப்பில் இருக்கும் அல்லது வீட்டில் இருக்கும் உத்தரவுக்கு சம்பளம் இல்லா விடுப்பை எடுக்கச் சொல்லி முதலாளிகள் ஊழியர்களை வற்புறுத்தக்கூடாது என்று மனிதவள அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு ஊழியர்களை வற்புறுத்தும் முதலாளிகளின் வேலை அனுமதி தொடர்பான சலுகைகளுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்படும் என்றும் அமைச்சு நேற்று வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்தது.

சீனாவுக்குச் செல்லாத, அதனால் 14 நாள் கட்டாய விடுப்பில் செல்ல தேவையில்லாத ஊழியர்களை சம்பளம் இல்லா விடுப்பு எடுக்கச் சொல்லும் முதலாளிகளும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சு சொன்னது.

"முதலாளிகள் தங்கள் ஊழியர்களிடம் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்று மனிதவள அமைச்சு எதிர்பார்க்கிறது. விடுப்பு தொடர்பில் முதலாளி

களிடமிருந்து வற்புறுத்தலை எதிர்நோக்கும் ஊழியர்கள் மனிதவள அமைச்சிடம் தெரிவிக்க வேண்டும்," என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் கேட்ட கேள்விக்கு அமைச்சின் பேச்சாளர் பதிலளித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11.59 மணிக்கு நடப்புக்கு வந்த, வீட்டில் இருக்கும் புதிய உத்தரவு, கடந்த 14 நாட்களில் சீனாவுக்குச் சென்று வந்த சிங்கப்பூர் குடியிருப்பாளர்களுக்கும் நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும்.

ஹுபெய் மாநிலத்திலிருந்து சிங்கப்பூர் வருவோருக்கு இந்த உத்தரவுக்குப் பதிலாக தனிமைப்படுத்தும் உத்தரவு வழங்கப்படும்.

14 நாள் கட்டாய விடுப்பைவிட கடுமையானதாகக் கருதப்படும் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவைப் பெற்றிருப்பவர்கள் அந்த 14 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.

விடுப்பில் இருக்கும்போது ஊழியர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்கப்பட வேண்டும்.