கொரோனா கிருமித்தொற்று காரணமாக விமானப் பயணங்களுக்கான தேவை குறைந்திருக்கும் வேளையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனம் தனது விமானங்களின் உட்புறத்தைத் தூய்மைப்படுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
பயணிகளுக்கும் விமானச் சிப்பந்திகளுக்கும் இடையே தொடர்பைக் குறைக்கும் வகையில் எஸ்ஐஏ தனது விமானத்துக்குள்ளான சேவைகளில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
விமானத்துக்குள் படிக்கும் சஞ்சிகைகள் அகற்றப்பட்டுள்ளதும் சூடான முகத்துண்டுகளுக்குப் பதிலாக ஈரத்துண்டு பொட்டலங்களை வழங்குவதும் அந்த மாற்றங்களில் சில.
சீனப் புத்தாண்டுக்குப் பிறகு கொரோனா கிருமித்தொற்று கடுமையான பிறகு எஸ்ஐஏ தனது தூய்மைப்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியது என்று எஸ்ஐஏ நிறுவனத்தின் விமானத்துக்குள்ளான சேவைகள் பிரிவின் செயலாக்க மேலாளர் நிக்கோல் லியூ நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விமானக் கழிவறைகளையும் கம்பள விரிப்புகளையும் சுத்தப்படுத்துதல், உணவுத் தட்டுகள் வைக்கும் தாம்பாளத்தின் மேல்பகுதியைத் துடைத்தல் போன்றவற்றைத் தவிர, விமான சன்னல்களையும் விமானத்தில் உள்ள பொழுதுபோக்குத் தொடுதிரைகளையும் வலுவான கிருமிநாசினியைக் கொண்டும் எஸ்ஐஏ துடைக்கிறது.
சீனாவிலிருந்து வரும் விமானங்களில் நீராவியைக் கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நீராவி தூய்மைப்படுத்தும் நடவடிக்கைக்கு பெரும்பாலான விமானங்களுக்குக் குறைந்தது 60 நிமிடங்களும் A380 விமானங்களுக்கு 90 நிமிடங்களும் பிடிக்கும்.
சிங்கப்பூர் வந்து சேரும் விமானங்கள் அடுத்த பயணத்துக்குக் குறைந்த நேரத்தில் தயாராக வேண்டும். ஆனால், அதே வேளையில் அதன் தூய்மையும் கட்டிக்காக்கப்பட வேண்டும் என்பதால் நாங்கள் மிகக் கவனமாக இருக்கிறோம்," என்று தெரிவித்தார் திருவாட்டி லியூ.
போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானும் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின்னும் நேற்று எஸ்ஐஏ விமானங்களில் மேற்கொள்ளப்படும் தூய்மைப்படுத்தும் பணிகளைப் பார்வையிட்டனர்.
"விமானங்களில் தூய்மை என்பது பயணிகள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கக்கூடியது. கொரோனா கிருமித்தொற்று உலகைப் பாதித்திருக்கும் சூழ்நிலையில் இப்போது தூய்மை என்பது அதிமுக்கியத்துவம் பெறுகிறது.
"ஆக, தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் நாம் காட்டும் தீவிரம் விமானப் பயணிகள் மற்றும் விமானச் சிப்பந்திகளின் நம்பிக்கையை அதிகரிக்கும்," என்றார் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின்.

