ஜெர்மனி துப்பாக்கிச்சூட்டு: இறந்தோருக்காக இரங்கல்

பெர்லின்: புதன்கிழமையன்று ஜெர்மனியின் ஹனாவ் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பலியான ஒன்பது உயிர்களுக்காக நேற்று முன்தினம் இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜெர்மனியிலுள்ள ஹனாவ், பெர்லின் நகர்களில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். 

துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் 21 வயதுக்கும் 44 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். 

‘ஷிஷா’ புகைபிடிக்கும் இரு மதுபான கூடங்களுக்கு அடுத்தடுத்து சென்று அங்கிருந்தவர்களைச் சரமாரியாகச் சுடத் தொடங்கிய சந்தேக நபர் தப்பித்துச் சென்றதை அடுத்து போலிசார் அவனின் அடையாளத்தைக் கண்டுபிடித்து அவனின் வீட்டுக்குள் மறுநாள் புகுந்தனர். 

அங்கு சந்தேக நபரும் அவனின் 72 வயதான தாயாரும் துப்பாக்கிச் சூடுபட்டு இறந்து கிடந்தனர். சந்தேக நபருக்கு அருகில் ஒரு துப்பாக்கியும் இருந்தது.

புதன்கிழமை மாலை நடந்த தாக்குதலைப் பயங்கரவாதம் தொடர்புடையதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.

துப்பாக்கிச்சூட்டை நடத்திய சந்தேக நபரான டோபியஸ் ஆர், 43, இனவெறி தொனி கொண்ட கருத்துகளை இணையத்தில் வெளியிட்டிருந்ததாக அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். 

அத்துடன் துருக்கி, இஸ்‌ரேல் உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்தோர் ஒழிக்கப்படவேண்டும் என்று டோபியஸ் குறிப்பிட்டிருந்ததாகவும் ‘ஏஎஃப்பி’ நிறுவனம் கூறியிருந்தது.

துப்பாக்கிச்சூட்டில் குறிவைக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து குடியேறியவர்கள் என்றும் பெரும்பாலும் குர்தியப் பின்னணியைக் கொண்டவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

இஸ்லாமியர்களுக்கு எதிராக நிலவி வரும் வெறுப்புணர்ச்சி குறித்து ஒரு தெளிவான நிலைப்பாடு வேண்டும் என்று ஜெர்மனியின் முஸ்லிம் சங்கம் ‘கேஆர்எம்’ கோரிக்கை விடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டது.

இத்தாக்குதலை ‘இனவாதத்தின் நஞ்சு’ என்று குறிப்பிட்டார் தலைவர் எஞ்சலா மெர்க்கல்.

இதுபோன்ற பல துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் அப்பாவி உயிர்கள் போனதை அடுத்து ஜெர்மனியில் துப்பாக்கி தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன.