சரக்குவண்டியில் 39 உடல்கள்; எழுவர்மீது குற்றச்சாட்டு

ஹனோய்: சரக்குவண்டியின் பின்பகுதியில் 39 பேரின் சடலங்கள் சென்ற ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து எழுவர் மீது வியட்நாமிய போலிஸ் குற்றம்சாட்டி உள்ளது.

வேலைக்காக பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குள் கள்ளத்தனமாக வர 67 வியட்நாமியர்களுக்கு போலி அடையாளங்களை உருவாக்கியதன் தொடர்பில் எழுவர் மீதும் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. அதில் சீனாவில் வசிக்கும் வியட்நாமிய மாது ஒருவரும் அடங்குவதாக கூறப்படுகிறது. 

சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன் ஒரு குறுகிய இடத்தில் இருந்ததால் அதிக வெப்பம் ஏற்பட்டதாலும் சரக்குவண்டியில் பயணம் செய்த 39 பேரும் இறந்ததாக பிரேத பரிசோதனை முடிவுகள் கூறுகின்றன.

மத்திய வியட்நாமின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த அந்த 39 பேரில் இருவர் 15 வயது சிறுவர்கள் என்றும் கூறப்பட்டது.

உயிரிழந்தோர் பிறந்த பகுதிகளில் ஒழுங்கான வேலைவாய்ப்புகள் இல்லாததுடன் அங்கு கடத்தல் கும்பல்கள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அதிகம் இருந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் பலர் வேறு நாட்டுக்குக் குடிபெயரும் முயற்சியில் இறங்கிவிடுவதாக நம்பப் படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாவது குறித்த தகவல்கள் எதையும் போலிசார் வெளியிடவில்லை.

இதற்கிடையே விசாரணையைத் தொடர்வதாகவும் அதை விரிவாக்க இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சடலங்களைக் கண்டுபிடித்ததிலிருந்து போலிசார் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து வரும் வரிசையில் சென்ற வாரம் இருவர் கைதாகினர்.