லண்டன் பள்ளிவாசலில் கத்திக்குத்து: சந்தேகப்பேர்வழி பிடிபட்டார்

லண்டன்: தொழுகையை வழிநடத்தும் தலைவர் ஒருவர் லண்டன் பள்ளிவாசலில் தாக்கப்பட்டதை அடுத்து போலிசார் 29 வயது சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்து   உள்ளனர். 

மத்திய லண்டனில் உள்ள ‘லண்டன் சென்ட்ரல் மாஸ்க்’கில் 70 வயது மதிக்கத்தக்க சமயத் தலைவரைச் சந்தேகப்பேர்வழி கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த நேரத்தில் பள்ளிவாசலில் கிட்டத்தட்ட 100 பேர் இருந்ததாக அறியப்படுகிறது.

தாக்குதல் நடந்தபின் போலிசார் வரும்வரை அங்கிருந்தவர்கள் சந்தேகப் பேர்வழியைப் பிடித்து வைத்து இருந்தனர். 

கடந்த சில வாரங்களாக அந்த ஆடவர் பள்ளிவாசலுக்கு வந்து போனதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இத்தாக்குதல் பயங்கரவாதம் தொடர்பானது அல்ல என்று போலிசார் கூறியுள்ளனர். 

தாக்கப்பட்ட முதியவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவரின் காயங்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியவை அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது. 

ஒரு வழிபாட்டுத் தலத்தில் இவ்வாறு நடந்தது தமக்குப் பெரும் கவலை அளிப்பதாக சம்பவம் குறித்துப் பேசியிருந்தார் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

1944ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்ட இவ்வரலாற்று சிறப்புமிக்க பள்ளிவாசலுக்குத் தொழுகைக்காகவும் சுற்றிப் பார்க்கவும் கூட்டம் வருவது வாடிக்கை.