கொலொராடோ: அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்கார் விருதளிப்பு நிகழ்ச்சியில் தென்கொரியத் திரைப்படமான 'பெரசைட்' சிறந்த திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதை அடுத்து அந்த முடிவை எதிர்க்கும் வகையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது பிரசார உரையில் பேசியிருந்தார்.
"எப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டது? வர்த்தகம் தொடர்பாக தென்கொரியாவுடன் பிரச்சினைகள் இருக்க, தலைசிறந்த திரைப் படம் என்ற விருதும் அவர்களுக்கா?" என்று பொருள்படும் வகையில் திரு டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
கிட்டத்தட்ட 80 ஆண்டு களுக்கு முன் சிவில் போர்க்காலத்தைச் சித்திரித்த 'கோன் வித் த வின்ட்' போன்ற படங்கள் இக்காலத்தில் மீண்டும் வராதா என்றவாறு கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களிடம் அவர் வினவினார்.
ஆங்கிலம் அல்லாத திரைப்படம் ஒன்று 'ஆஸ்கார்' விருதைப் பெற்றது இதுவே முதல் முறை. அத்துடன் 'சிறந்த இயக்குநர்', 'சிறந்த திரைக்கதை', 'சிறந்த அனைத்துலக திரைப்படம்' என மேலும் மூன்று விருதுகள் இப்படத்திற்குக் கிடைத்தன. நவீன சோலில் பணக்காரர் களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி பற்றிய கதைதான் 'பெரசைட்'.

