மகாதீர்: என் பதவி விலகல் என் கையில்

மகாதீர்: என் பதவி விலகல் என் கையில்

2 mins read
0d7e6867-ab50-4c19-ac64-a18c6b655269
மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது, தாம் பதவி விலகும் காலம் குறித்து முடிவெடுக்கும்வரை, அவரே பிரதமராகத் தொடர்ந்து இருக்க மலேசியாவின் ஆளும் கூட்டணிக் கட்சியான பக்கத்தான் ஹரப்பான் ஒப்புதல் அளித்துள்ளது. படம்: இபிஏ -

மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது, தாம் பதவி விலகும் காலம் குறித்து முடிவெடுக்கும்வரை, அவரே பிரதமராகத் தொடர்ந்து இருக்க மலேசியாவின் ஆளும் கூட்டணிக் கட்சியான பக்கத்தான் ஹரப்பான் ஒப்புதல் அளித்துள்ளது.

"கூட்டணிக் கட்சியின் எதிர்காலம் பற்றி நாங்கள் மிக விரிவாகக் கலந்தாலோசித்து உள்ளோம். இரண்டு கருத்துகள் நிலவின. ஆனால் இறுதியில் முடிவு என்னிடமே விடப்பட்டது.

"ஏபெக் மாநாட்டுக்குப் பிறகு மாற்றம் நடக்கும். நேரம், தேதி போன்ற தகவல்கள் இல்லை. இது என் விருப்பம்," என்று செய்தியாளர்களிடம் கூறினார் டாக்டர் மகாதீர்.

நேற்று (பிப்ரவரி 21) இரவு நடைபெற்ற பக்கத்தான் ஹரப்பான் அதிபர் மன்றக் கூட்டத்தை அடுத்து அவர் இவ்வாறு பேசியிருந்தார்.

இவ்வாண்டு ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு (ஏபெக்)மாநாட்டை மலேசியா ஏற்று நடத்துகிறது. நவம்பர் மாதத்தில் நடைபெறும் மாநாட்டுக்குப் பிறகு பிகேஆர் கட்சியின் தலைவரான அன்வார் இப்ராஹிம், பிரதமர் பதவியை ஏற்பார் என்று டாக்டர் மகாதீர் முகம்மது முன்னரே குறிப்பிட்டிருந்தார். இதை மறுஉறுதிப்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்திற்குப் பிறகு டாக்டர் மகாதீர் பதவி விலகல் முடிவைப் பற்றி பேசினார்.

பதவி விலகல் எப்போது நடக்கும் என்ற தகவல்களை அவர் வெளியிடாதபட்சத்தில் ஏபெக் முடிந்த கையோடு அது நடந்துவிடாது என்று ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

"அவர் தொடர்ந்து வழிநடத்தட்டும். சரியான நேரத்தை அவர் குறிக்கும்போது மாற்றம் நிகழும். அதுவரை நான் பொறுமையாக இருந்துதான் தீரவேண்டும்," என்று மகாதீரின் முடிவைக் குறித்துப் பேசினார் திரு அன்வார்.

பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி செய்யத் தொடங்கி கிட்டத்தட்ட ஈராண்டுகளாகியுள்ள நிலையில், கடந்த ஒரு மாதமாக பதவி மாற்றம் குறித்த பேச்சு அடிபடுகிறது.

அன்வார் ஆதரவாளர்கள் மாற்றம் நிகழ்வதற்கான ஒரு உறுதியான தேதியைக் கோரியுள்ளதை அடுத்து, பொருளியலில் கவனம் செலுத்த வேண்டியதே இப்போது முக்கியம் என்று திரு அன்வார் கேட்டுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து பதவி விலகினாலும் டாக்டர் மகாதீர் தமது அமைச்சரவையில் இருக்கும் சாத்தியத்தைத் தாம் வரவேற்பதாக திரு அன்வார் கூறினார். ஆனால் அதே சமயம் டாக்டர் மகாதீரின் அமைச்சரவையில் தாம் அங்கம் வகிக்கமுடியாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

#தமிழ்முரசு #மலேசியா #அன்வார் #மகாதீர்

குறிப்புச் சொற்கள்