- முஹம்மது ஃபைரோஸ் -
வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மெக்பர்சன் பகுதியில் வீட்டிற்கு அருகே உள்ள மாத்தார் பள்ளிவாசலுக்கு அப்துல் பாசித் செல்வது வழக்கம்.
சிங்கப்பூரில் 'கொவிட்-19' கிருமி பரவலைத் தடுக்க, பள்ளிவாசல்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக, தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்கு வருபவர்கள் சொந்த தொழுகை பாயைக் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுவதைத் திரு பாசித் அறிந்து வைத்துள்ளார்.
இருப்பினும், வெள்ளிக்கிழமை தொழுகைக்காக நேற்று முன்தினம் மாத்தார் பள்ளிவாசலுக்குச் சென்ற அவர், சொந்த தொழுகை பாயைக் கொண்டு வரவில்லை.
"தற்போதைய சூழலில் சொந்த தொழுகை பாயைக் கொண்டு வருவது நல்லதுதான். எனினும், தொழுகைக்கு முன்பாக நாம் ஒது செய்துகொள்ள வேண்டியிருப்பதால் உடல் பாகங்களைச் சுத்தம் செய்துகொள்கிறோம். எனவே, பள்ளிவாசலில் கிருமி பரவுவது குறித்த அச்சம் எனக்கு இல்லை," என்றார் திரு பாசித், 26.
ஒது செய்துகொள்வது என்பது தொழுகைக்கு முன்பாக கை, கால், முகம், வாய் உள்ளிட்ட உடல் பாகங்களைச் சுத்தம் செய்துகொள்வதைக் குறிக்கிறது.
மாத்தார் பள்ளிவாசல், வாம்போ பகுதியில் உள்ள ஹஜ்ஜா ரஹிமபி பள்ளிவாசல் ஆகியவற்றுக்கு நேற்று முன்தினம் வந்தவர்களில் பெரும்பாலானோர் சொந்த தொழுகை பாயைக் கொண்டு வராவிட்டாலும் ஒரு சிலர் தாங்கள் தொழும் பகுதியில் கைக்குட்டையைத் தரையில் விரித்து வைத்தனர்.
தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வருவதற்கு முன்பு உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

