கொரோனா கிருமித்தொற்றுக்கு சிங்கப்பூரில் மக்கள் பாதிப்படைந்து வரும் வேளையில், உணவு, பானத்துறையில் உள்ள சில நிறுவனங்கள் கிருமித்தொற்றிலிருந்து விடுபட தங்கள் வர்த்தக இடங்களில் தூய்மைப்படுத்தும் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.
ஈசூனில் உள்ள ஜிஎச்கே@காத்திப் காப்பிக்கடையின் உரிமையாளர் மாறுநேர வேலையில் (ஷிஃப்ட்) உள்ள தமது துப்புரவுப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறார். இப்போது அங்கு ஒரு மாறுநேர வேலையில் மூன்று ஊழியர்கள் உள்ளனர்.
ஊழியர்களுக்கு ரப்பர் கையுறை கொடுக்கப்பட்டுள்ளது. கழிவறைகள் அடிக்கடி சுத்தம் செய்யப்படுகின்றன. அங்கு கை கழுவும் திரவம், கழிவறைத்தாள் போன்றவை நிரப்பப்படுகின்றன.
"இந்த நல்ல சுகாதாரப் பழக்கங்களை நாம் கடைப்பிடிக்கவில்லை என்றால், அதன் மூலம் யாருக்காவது உடல் நலமில்லாமல் போகக்கூடும். நாம் இதில் மெத்தனமாக இருக்கக்கூடாது," என்று தீவு முழுவதிலும் 11 காப்பிக் கடைகளை நிர்வகிக்கும் ஜிஎச்கே ஹோல்டிங்ஸ் குழுமத்தின் தலைவர் திரு கோ ஹங் குவாங் தெரிவித்தார்.
ஜிஎச்கே@காத்திப் காப்பிக்கடையை முன்னுதாரணமாகக் கொண்டு, 'கிருமியைக் கட்டுக்குள் வைத்திருங்கள்' எனும் இயக்கத்தை பொதுச் சுகாதார மன்றம் நேற்று தொடங்கியது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தேசிய சுற்றுப்புற வாரியம் தொடங்கிய 'எஸ்ஜி கிளீன்' எனும் தூய்மையைக் கடைப்பிடிக்கும் இயக்கத்தை ஒட்டி, பொதுச் சுகாதார மன்றம் காணொளிகள், சமூக ஊடகச் செய்திகள் ஆகியவை மூலம் சுய சுகாதாரத்தைப் பேணும் விழிப்புணர்வைப் பிரபலப்படுத்தும் என்றார் மன்றத்தின் தலைவர் திரு எட்வர்ட் டி சில்வா.
நீ சூன் சவுத் பகுதியில் உள்ள உணவுக் கடைகளுக்குச் சென்று ஊழியர்கள், வாடிக்கையாளர்களிடம் பொதுச் சுகாதாரம் பற்றி எடுத்துரைத்தார் நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லீ பீ வா.
சுய சுகாதாரம், வீட்டில் சுகாதாரம் ஆகியவற்றுடன் பொது இடங்களிலும் சுகாதாரத்தைக் கட்டிக்காப்பது மக்களின் பொறுப்பு என்றும் திருவாட்டி லீ குடியிருப்பாளர்களிடம் வலியுறுத்திக் கூறினார்.

