கோலாலம்பூர்: 'எல்டிடிஇ' எனப்படும் தமிழீழ விடுதலைப் புலி கள் இயக்கத்திற்கு ஆதரவாக இருந்ததன் தொடர்பில் 12 பேர் மீது பதிவாகியிருந்த குற்றச்சாட்டுகளை மலேசியா நேற்று முன்தினம் மீட்டுக்கொண்டது.இதைத் தொடர்ந்து இம்முடிவுக்கு எதிராக பலதரப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
குற்றச்சாட்டுகளை மீட்பதாக அரசாங்கத் தலைமை சட்ட அதிகாரி டோமி தாமஸ் (படம்) அறிவித்ததை அடுத்து, அவரைத் தொடர்ந்து பதவியில் வைத்திருந்தால் அதை எதிர்த்துப் பேரணி நடத்தவிருப்பதாக மலேசிய எதிர்க்கட்சியான 'பிஏஎஸ்' மிரட்டல் விடுத்துள்ளது.
அத்துடன் அரசாங்கத் தலைமை சட்ட அதிகாரியை மாற்றுமாறு மலேசிய அரசருக்குக் கோரிக்கை விடுக்கவிருப்பதாக முஸ்லிம் வழக்கறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பக்கத்தான் ஹரப்பானின் ஓர் அங்கமான ஜனநாயக செயல் கட்சியைச் (டிஏபி) சேர்ந்த இரண்டு உறுப்பினர்களான ஜி.சாமிநாதன், பி.குணசேகரன் ஆகியோர் அந்த 12 பேரில் அடங்குவர்.
இதற்கிடையே குற்றச்சாட்டுகளை மீட்குமாறு கோரிக்கை விடுத்து வந்த டிஏபி, குற்றச்சாட்டுகளை மீட்பதாக எடுக்கப்பட்ட முடிவை வரவேற்றது.
இருப்பினும் ஆளும் கூட்டணிக் கட்சியின் ஆதரவாளர்களைப் பாதுகாக்க, அரசாங்கம் அதன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி உள்ளதென அரசாங்கத் தலைமை சட்ட அதிகாரியின் முடிவு பலதரப் பிலிருந்தும் கண்டனத்தை ஈர்த்துள்ளது.
இதையடுத்து 'எல்டிடிஇ' பயங்கரவாத அமைப்பாகத்தான் குறிப்பிடப் படும் என்று மலேசிய உள்துறை அமைச்சர் முஹைதின் யாசின் நேற்று கூறியிருந்தார். இதில் தலையிட அரசாங்கத் தலைமை சட்ட அதிகாரிக்கு உரிமையில்லை என்றும் அவர் சொன்னார்.

