சோல்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கருத்துகள் குறுகிய கண்ணோட்டம் கொண்டவை என்று 'பாரசைட்' திரைப்பட இயக்குநர் போங் ஜூன் ஹோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரசித்திபெற்ற ஆஸ்கர் விழாவில் தென்கொரிய திரைப்படமான பாரசைட்டுக்கு சிறந்த திரைப்படம் உள்ளிட்ட விருதுகள் அளிக்கப்பட்டதை அதிபர் டிரம்ப் கடந்த வியாழக்கிழமை விமர்சித்திருந்தார்.
தென்கொரிய திரைப்படம் ஒன்றுக்கு ஆஸ்கர் விருது வழங்கியிருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல என்று அவர் சாடினார்.
ஜெர்மனித் தலைநகர் பெர்லினில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் பேசிய இயக்குநர் போங், திரு டிரம்ப்பின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், திரு டிரம்ப்பின் கருத்துகள் தமக்குப் பெரும் கோபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக கூறினார்.
உலகளவில் கொரிய திரைப்படங்களைப் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதைச் சுட்டிய அவர், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொரிய படங்களை விரும்பி பார்க்கின்றனர் என்று கூறினார்.
"புகழ்பெற்ற ஆஸ்கர் விழாவில் எங்களது திரைப்படம் தகுதி அடிப்படையில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது.
"பொறாமைக் குணம் கொண்டுள்ள திரு டிரம்ப், இத்தகைய கருத்துகள் கூறுவதை முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும்," என்று திரு போங் பதிலடி தந்தார்.

