பரபரப்பின் உச்சத்தில் மலேசிய அரசியல் களம்; என்ன?.. எப்போது?..

பரபரப்பின் உச்சத்தில் மலேசிய அரசியல் களம்; என்ன?.. எப்போது?..

4 mins read
f7d8743e-8908-4af7-af08-4ae8ae65b561
மலேசிய மாமன்னரைச் சந்திப்பதற்காக கோலாலம்பூரில் இருக்கும் தேசிய அரண்மனை வளாகத்துக்குள் பாதுகாப்பாளர்கள் புடைசூழ பிரதமர் மகாதீர் நுழைந்தார். படம்: இபிஏ -

மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது தனது பதவி விலகல் கடிதத்தை அரசரிடம் இன்று (பிப்ரவரி 24) சமர்ப்பித்துள்ளார். மேலும், பெர்சாத்து கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

திரு அன்வார் இப்ராகிமின் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்தக் கூட்டணியிலிருந்து விலகி தனிக் குழுவை உருவாக்கியுள்ளனர். பிகேஆர் கட்சியின் துணைத் தலைவரும் மலேசியாவின் பொருளியல் விவகார அமைச்சருமான திரு அஸ்மின் அலி, வீடமைப்பு மற்றும் உள்ளூர் அரசாங்க அமைச்சரான ஸுரைடா கமாருதின் ஆகியோரின் தலைமையில், அவர்கள் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியிலிருந்து வெளியேறினர்.

26 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட டாக்டர் மகாதீரின் பிரிபூமி பெர்சாத்து மலேசியா கட்சி பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக இன்று அறிவித்தது.

அதனையடுத்து, நாடாளுமன்றத்தில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி பெரும்பான்மை பலத்தை இழந்திருக்கிறது. தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி கவிழ்ந்திருப்பதையே இது காட்டுகிறது.

இந்த அரசியல் பரபரப்பில் நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:

இன்று (பிப்ரவரி 24, திங்கட்கிழமை)

இரவு 7 மணி: - மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீரின் பதவி விலகலை மலேசிய மாமன்னர் ஏற்றுக்கொண்டார். ஆனால், அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும்வரை இடைக்காலப் பிரதமராக அந்தப் பதவியில் இருக்குமாறு டாக்டர் மகாதீரை மாமன்னர் கேட்டுக்கொண்டார்.

மாலை 4.45 மணி: - மலேசிய மாமன்னரைச் சந்திப்பதற்காக கோலாலம்பூரில் இருக்கும் தேசிய அரண்மனை வளாகத்துக்குள் பாதுகாப்பாளர்கள் புடைசூழ பிரதமர் மகாதீர் நுழைந்தார். 5 மணிக்கு மாமன்னரை அவர் சந்திப்பார் என்று கூறப்பட்டது.

- டாக்டர் மகாதீர் பிரதமராகத் தொடர்வதற்கு மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் (டிஏபி) பொதுச் செயலாளர் லிம் குவான் எங் ஆதரவு தெரிவித்தார்.

மாலை 4 மணி:

- அரசியல் சதியில் டாக்டர் மகாதீருக்குப் பங்கில்லை என்று திரு அன்வார் இப்ராகிம் குறிப்பிட்டார்.

பிற்பகல் 3.20 மணி:

- டாக்டர் மகாதீர் பிரதமராகத் தொடர்வதற்கு அமனா நெகரா கட்சியின் தலைவர் முகமது சாபு தமது ஆதரவை அறிவித்தார். பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் இருந்த நான்கு கட்சிகளில் அமனாவும் ஒன்று.

பிற்பகல் 3 மணி:

- தமது கட்சியான பிரிபூமி பெர்சாத்து மலேசியா கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக டாக்டர் மகாதீர் அறிவித்தார்.

பிற்பகல் 2.30 மணி:

- திரு அன்வார் அவரது துணைவியாரும் மலேசியாவின் துணைப் பிரதமருமான திருவாட்டி வான் அஸிஸாவுடன் மலேசிய மாமன்னரை கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் சந்தித்தனர். 45 நிமிடங்களுக்கு நீடித்த இந்தச் சந்திப்புக்குப் பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து வெளியேறினர். அவர்கள் செய்தியாளர்களிடம் தகவல் எதையும் பகிர்ந்துகொள்ளவில்லை.

பிற்பகல் 2 மணி:

- ஆளும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியிலிருந்து டாக்டர் மகாதீரின் பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சி வெளியேறுவதாக அறிவிப்பு.

- பிகேஆர் கட்சியின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதால், பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி கவிழ்ந்தது.

பிற்பகல் 2 மணி:

- மலேசியாவின் பிரதமர் பதவியிலிருந்து டாக்டர் மகாதீர் பதவி விலகினார்.

காலை 11 மணி:

- கண்ட்ரி ஹைட்சில் இருக்கும் டாக்டர் மகாதீரின் இல்லத்தில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் இருக்கும் நான்கு கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு.

காலை 10.30 மணி:

- டாக்டர் மகாதீரை அவரது அலுவலகத்தில் சந்திக்க முடியாமல் போனதையடுத்து, திரு அன்வார், துணைப் பிரதமர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், நிதியமைச்சர் லிம் குவான் எங், தற்காப்பு அமைச்சர் முகமது சாபு ஆகியோர் அங்கிருந்து வெளியேறினர்.

ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23):

இரவு 8 மணி:

- பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். திரு அன்வாருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் சத்தமிட்டபடி இருந்தனர். புதிதாக உருவானதாகக் கூறப்பட்ட கூட்டணி உறுப்பினர்கள் புத்ரா ஜெயாவிலுள்ள ஷெரட்டான் ஹோட்டலில் விருந்தில் கலந்துகொண்டனர்.

மாலை 6 மணி:

- புதிதாக அமைக்கப்படவுள்ள கூட்டணியில் உள்ள ஐந்து கட்சிகளின் தலைவர்களும் ஒரு துணைத் தலைவரும் மலேசிய மாமன்னரைச் சந்தித்தனர்.

பிற்பகல் 4 மணி:

- கோலாலம்பூரில் உள்ள புத்ரா வோர்ல்ட் டிரேட் செண்டரில் அமைந்துள்ள அம்னோ கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் உச்ச மன்றத்தின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது.

காலை 10 மணி:

- பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலியும் அவரது ஆதரவாளர்களும் புத்ரா ஜெயாவிலுள்ள ஷெரட்டான் ஹோட்டலில் கூட்டம் ஒன்றை நடத்தினர். அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் ஸுரைதா கமாருதின், சைஃபுதின் அப்துல்லா ஆகியோர் இருந்தனர். பிகேஆர் கட்சியின் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 பேர் திரு அஸ்மின் அலியின் தலைமையில் டாக்டர் மகாதீரின் புதிய கூட்டணியில் சேர இருப்பதாகக் கூறப்பட்டது.

காலை 9 மணி:

- டாக்டர் மகாதீரின் பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சி உறுப்பினர்கள், பெட்டாலிங் ஜெயாவிலுள்ள அதன் தலைமையகத்தில் ஆறு மணி நேரத்துக்கு கலந்தாலோசித்தனர். பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியிலிருந்து விலகுவது பற்றி விவாதித்ததாக பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர் ரெட்ஸுவான் யூசுஃப் செய்தியாளர்களிடம் கூறினார்.

சனிக்கிழமை (பிப்ரவரி 22):

- அம்னோ, பாஸ் கட்சி ஆகியவை தங்களது இரண்டு நாள் கூட்டத்தை ஜண்டா பயிக்கில் தொடங்கின.

#மலேசியா #அரசியல் #மகாதீர் #அன்வார்