கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் நடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் உருவானது பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி.
தேர்தலில் இக்கூட்டணி எதிர்பாராத வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இக்கூட்டணியில் நான்கு முக்கிய கட்சிகள் அங்கம் வகித்தன. சபாவில் உள்ள இரண்டு கட்சிகள் ஆதரவு அளித்தன.
50 எம்பிக்களுடன் பிகேஆர் கட்சியும் 42 எம்பிக்களுடன் டிஏபி கட்சியும் 26 உறுப்பினர்களுடன் பெர்சத்துவும் 11 உறுப்பினர்களுடன் அமனாவும் கூட்டணி அமைத்தன.
இதுதவிர வாரிசன் சாபா கட்சி 9 உறுப்பினர்களுடனும் ஐக்கிய முன்னேற்ற கினாபாலு அமைப்பு ஓர் உறுப்பினருடனும் ஆதரவு அளித்தன.
இதையடுத்து, 222 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 112 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 139 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி.
இதையடுத்து பெர்சத்து கட்சியின் 94 வயதான மகாதீர் முகமது 2018ல் 2வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.
இந்நிலையில், பிரதமர் மகாதீர் தலைமையிலான ஆளும் கூட்டணியில் கடந்த சில மாதங்களாக பதற்றம் நிலவி வந்தது.
இதற்கு முக்கிய காரணமாக, தேர்தலுக்கு முன் பெர்சத்து கட்சிக்கும் அன்வாரின் பிகேஆர் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட தலைமைத்துவ பகிர்வு ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது.
அந்த ஒப்பந்தப்படி, பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சி அமைக்கும் பட்சத்தில், மகாதீர் சில ஆண்டுகளுக்கும் அன்வார் சில ஆண்டுகளுக்கும் பிரதமராக பதவி வகிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சி அமைந்து இரண்டாவது ஆண்டு கொண்டாட்டத்திற்கான காலம் நெருங்கும் நிலையில், 72 வயது அன்வார் பிரதமராக பதவியேற்கும் தேதியை முடிவு செய்யுமாறு அன்வார் ஆதரவாளர்கள் மகாதீருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கிடையே, பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வாருக்கும் அதன் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்கும் இடையிலான மோதல் கூட்டணியில் பதற்றத்தை மேலும் அதிகரித்தது.
வரும் 2023ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல் வரை மகாதீரே பிரதமராக தொடருமாறு பிகேஆர் கட்சியின் அஸ்மின் பலமுறை கேட்டுக்கொண்டார். மேலும் அஸ்மினுக்கு பிரதமர் ஆதரவாக இருப்பதாகவும் பேச்சு எழுந்தது.
இந்நிலையில், அஸ்மின் உட்பட அவருக்கு ஆதரவு அளித்த 11 பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயேச்சையாக செயல்பட போவதாகக் கூறி கட்சியிலிருந்து விலகினார்கள்.
நேற்று பிரதமர் மகாதீர் பதவி விலகினார். இதையடுத்து பெர்சத்து கட்சியின் 26 உறுப்பினர்களும் கூட்டணியில் இருந்து விலகியதால், பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது.
இதனிடையே, புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைத்து நம்பிக்கைக் கூட்டணியை வீழ்த்துவதில் பிரதமர் மகாதீர் ஈடுபடவில்லை என்றும் அவரது பெயர் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ளவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் சொன்னார் அன்வார்.

