ரகசிய தகவல் கசிவு: ஷிஃப்பை சாடும் டிரம்ப்

ரகசிய தகவல் கசிவு: ஷிஃப்பை சாடும் டிரம்ப்

1 mins read

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக முன்னணியில் இருக்கும் பெர்னி சாண்டர்சுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த ரகசிய தகவல்களைக் கசிய விட்டதாக ஆடம் ஷிஃப் மீது அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

இந்தியாவுக்குப் புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், வெர்மான்ட்டைச் சேர்ந்த அமெரிக்க செனட்டரான சாண்டர்சின் பிரச்சாரத்தை மேம்படுத்துவதை ரஷ்யா நோக்கமாகக் கொண்டிருப்பது பற்றி உளவுத்துறை தன்னிடம் எதுவும் கூறாத நிலையில், அத்தகவலைக் கசிய விட்டதற்காக ஆடம் ஷிஃப் மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சொன்னார்.

ஆனால் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரான ஷிஃப், இந்த குற்றச்சாட்டை மறுத்தார்.

டிரம்ப் மீதான அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில் ஷிஃப் தலைமை வழக்கறிஞராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கருத்துகளால் அதிபர் டிரம்ப் தனது சொந்த நடவடிக்கைகள் மீதான கவனத்தைத் திசைதிருப்ப முயல்கிறார் என்று அவர் சொன்னார்.

முன்னதாக சாண்டர்ஸ், டிரம்ப் இருவருக்கும் உதவுவதற்காக ரஷ்யா தவறான தகவல்கள், பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது என்று உளவுத்துறை அதிகாரிகள் கூறியதாக காங்கிரஸ் வட்டாரம் கடந்த வெள்ளிக்கிழமை ராய்ட்டர்சிடம் தெரிவித்தது.