பொய்த்தகவல்களுக்கு எதிராக இணையத்தில் போராட்டம்

கொரோனா கிருமிப்பரவல் பற்றிய பொய்த்தகவல்களுக்கு  எதிரான முயற்சிகளைச் சமூக ஊடக நிறுவனங்கள் முடுக்கியுள்ளன.

இணைய மோசடிக்காரர்கள், இணையம்  வழி பிறருக்குத் தொல்லை கொடுப்போர் மற்றும் தீய நோக்கங்கள் கொண்டுள்ள இதர நபர்களின் செயல்பாடுகளைத் தடுக்க கூகல், பேஸ்புக் போன்ற தளங்கள் போராடி வருகின்றன.

கொரோனா கிருமி குறித்த மக்களின் அக்கறை, பொய்த்தகவலைப் பயன்படுத்துவதற்குத் தவறாக பயன்படுவதாக வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியர் கார்ல் பெர்க்ஸ்ட்ரோம் தெரிவித்தார்.

கிருமிப்பரவல் குறித்த நம்பகமான தகவல்களைப் பரப்ப வழிசெய்வது, சந்தேகத்திற்குரிய தகவல்களைச் சரிபார்ப்பது போன்ற உத்திகள் குறித்து இணைய நிறுவனங்கள் கடந்த வாரம் உலகச் சுகாதார நிறுவனத்துடன் சந்திப்பு ஒன்றில் பங்கேற்றபோது கலந்துரையாடின.

"கூகலில் இந்தக் கிருமி பற்றி மக்கள் தேடும்போது உலகச் சுகாதார நிறுவனத்தின் தகவல்களை தேடுத முடிவுகளில் முன்னிலைப்படுத்த உறுதி செய்திருக்கிறோம்" என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அட்ஹனோம் கூறினார்.

பொய்த்தகவல்களைப் பரப்பும் பதிவுகளைக் கட்டுப்படுத்தும் அல்லது தடைசெய்யும் நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் பேஸ்புக்கின் தலைவர் காங் ஸ்ங் ஜின் தெரிவித்தார்.