குணமடைந்தவர்களில் 14 விழுக்காட்டினருக்கு மீண்டும் கிருமி தொற்றியதால் அதிர்ச்சி

சீனாவில் உள்ள குவாங்டோங் மாநிலத்தில்தான் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கொரோனா கிருமி பாதிப்பிலிருந்து குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய 14 விழுக்காட்டினருக்கு மீண்டும் கிருமி தொற்றியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குணமடைந்த சில நோயாளி களிடம் மீண்டும் பரிசோதனை நடத்தியதில் கிருமி தொற்றியிருப்பது தெரிய வந்துள்ளதாக அம்மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் கொேரானா கிருமிக்கு எதிரான நடவடிக்கைகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர்.

“குணமடைந்தவர்களிடம் இன்னமும் ஏன் கொரோனா கிருமி காணப்படுகிறது என்பது பற்றி தற்போது எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.
“இவர்கள் மூலம் மற்றவர்களுக்கு கிருமி பரவக் கூடிய வாய்ப்பு உள்ளதா என்பதும் தெரியவில்லை,” என்று குவாங்டோங் நோய் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையத்தின் துணை இயக்குநர் சோங் டை தெரிவித்தார்.

நோயாளிகள் நுரையீரல் பாதிப்பி லிருந்து குணமடையவில்லை என் பதையே இது காட்டுகிறது. 

இவர்கள் முழுமையாக குணமடைய இன்னும் சில காலம் ஆகலாம் என்று சோங் குறிப்பிட்டார்.

தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள கொரோனா கிருமி சிகிச்சைக்கான வழிகாட்டியில் நோயாளிகளிடையே மேற்கொள்ளப்படும் தொண்டை, மூக்கு பரிசோதனையில் குணமடைந்து, காய்ச்சல் இல்லாமல் இருந்தால் அவர்கள் முழுமையாக குணமடைந்ததாகக் கருதப்பட்டு வீடு திரும்ப அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சிகிச்சை பெற்ற நோயாளிகள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வீடு திரும்பிய சில நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இன்னமும் கிருமி பாதிப்பு உள்ளது என்று  குவாங்ஷோ எண் 8 பொது மருத்து வமனையின் தீவிர சிகிச்சை பிரிவு இயக்குநர் தெரிவித்தார். மற்ற நோயாளிகளிடமும் சோதனை  நடைபெற்று வருகிறது.