ஜோகூர் மாநிலத்தில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் பிடி தளர்ந்துவிட்டதால் அந்த கூட்டணி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்துவிட்டது. இதனால் குறுகிய பெரும்பான்மையில் 28 இடங்களுடன் புதிய கூட்டணி ஆட்சிக் கட்டிலில் ஏறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோகூர் சுல்தானை தனிப்பட்ட முறையில் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேசினர்.
அப்போது புதிய கூட்டணிக்கு சுல்தான் ஒப்புதல் அளித்ததாக சுல்தானின் தனிப்பட்ட செயலாளர் ஜாபா முஹமட் நோஹா தெரிவித்தார். சுல்தானுடன் நடைபெற்ற சந்திப்பில் புதிய கூட்டணிக்கு 28 உறுப்பினர்களும் பக்கத்தான் ஹரப்பானுக்கு 26 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததாக அவர் கூறினார்.
மாநிலத்தின் வளர்ச்சிக்கு புதிய கூட்டணி பாடுபடும் என்று சுல்தான் நம்புவதாகவும் அவர் சொன்னார். "இரு உறுப்பினர்கள் வரவில்லை, ஆனால் இன்னமும் முதல்வர் பதவிக்கான திட்டத்தை புதிய கூட்டணி சமர்பிக்கவில்லை," என்றார் அவர். அம்னோ, எம்ஐசி, பாஸ் மற்றும் பெர்சத்துக் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கி புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆளும் கூட்டணியிலிருந்து பெர்சத்துக் கட்சியைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் விலகியதால் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர்களை சுல்தான் இப்ராஹிம் அழைத்துப் பேசினார். அப்போது புதிய கூட்டணிக்கு சுல்தான் ஒப்புதல் அளித்தார்.

