ஜோகூரில் குழப்பம்; பக்கத்தான் ஹரப்பானுக்கு 28 பேர் ஆதரவு

ஜோகூரில் குழப்பம்; பக்கத்தான் ஹரப்பானுக்கு 28 பேர் ஆதரவு

1 mins read
0edcc642-808e-4fe9-8354-73a0c44a351e
படம்: மலே மெயில் -

ஜோகூர் பாரு: ஜோகூரில் உள்ள பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி, மொத்தமுள்ள 56 சட்டமன்ற உறுப்பினர்களில் 28 பேர் தங்களை ஆதரிப்பதாகக் கூறியுள்ளது.

இதனால் ஜோகூரில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியை ஆதரிப்பதாக 28 உறுப்பினர்களும் பகிரங்கமாக அறிவித்தனர். அமானா கட்சியைச் சேர்ந்த ஒன்பது பேரும் ஜனநாயக செயல் கட்சியின் 14 பேரும் கெ அடிலான் கட்சியைச் சேர்ந்த ஐந்து பேரும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியை ஆதரிப்பதாகத் தெரிவித்தனர்.

ஜோகூர் அமானாவின் தலைவரான அமினோல்ஹுடா ஹசன், "நாங்கள் அனைவரும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் நீடிக்கிறோம். எங்களுக்கு 28 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது," என்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இதனால் புதிய கூட்டணிக்கு ஆட்சியமைக்க போதுமான ஆதரவு இல்லை என்றும் அவர் சொன்னார்.

சென்ற வியாழக்கிழமை ஆளும் பக்கத்தான் ஹரப்பானிலிருந்து பெர்சாத்துக் கட்சி விலகியதால் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டது. பெர்சாத்துக் கட்சியை உள்ளடக்கிய புதிய கூட்டணி ஆட்சியமைக்க முயற்சி செய்வதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது பக்கத்தான் ஹரப்பான் தங்களுக்கு போதுமான ஆதரவு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.