ஹாங்காங் ஊடக அதிபர் கைது

ஹாங்காங் ஊடக அதிபர் கைது

1 mins read
16649452-78b9-46cc-9496-bed0a5b0fd1d
ஹாங்காங்கில் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான ஜனநாயக ஆதரவு ஊடக அதிபர் ஜிம்மி லாய் கைது செய்யப்பட்டுள்ளார். படம்: ஊடகம் -

ஹாங்காங்: ஹாங்காங்கில் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான ஜனநாயக ஆதரவு ஊடக அதிபர் ஜிம்மி லாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாகக் கூடியதாகவும் மிரட்டும் வகையில் நடந்து கொண்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி அரசாங்கத்திற்கு எதிரான பேரணிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதில் திரு லாய் பங்கேற்றதாகக் கூறி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2017ல் செய்தியாளர் ஒருவருடன் ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடர்பில் அவர் மீது மிரட்டல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

திரு லாய் தொடங்கிய 'ஆப்பிள் டெய்லி' நாளேடு, ஹாங்காங் அரசாங்கத்தையும் சீனா தலைமைத்துவத்தையும் கடுமையாக விமர்சித்து வருகிறது.

இதற்குப் பழிவாங்கும் நோக்கத்தில் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இவருடன் சேர்த்து ஜனநாயக ஆதரவு முக்கிய அரசியல்வாதிகளான லீ சியூக்-யான், யூயங் சம் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களும் சட்டவிரோதமாகக் கூடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மூத்த சூப்ரின்டென்டண்ட் வோங் டுங்-குவோங், வரும் மே மாதம் 5ஆம் தேதி மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார்கள் என்று கூறியுள்ளார்.