கிருமி பரவலைத் தடுக்க சவூதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கிருமி பரவலைத் தடுக்க சவூதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

1 mins read
05bbc26d-1716-4e9e-ac1c-6ad6f52f0cfc
சவூதி அரேபியாவின் புனித மக்காஹ் நகரில் உள்ள ஹரம் ஷரீஃப் பள்ளிவாசலில்  தரையைச் சுத்தப்படுத்தும் பணியில் துப்புரவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். படம்: ஏஎஃப்பி -

சவூதி அரேபியாவின் புனித மக்காஹ் நகரில் உள்ள ஹரம் ஷரீஃப் பள்ளிவாசலில் தரையைச் சுத்தப்படுத்தும் பணியில் துப்புரவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்லாமிய சமயத்தின் புனித தலங்களைக் கொண்ட சவூதி, கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்களைத் தவிர்க்கும் நோக்கில், உம்ரா பயணம் செய்ய வரும் வெளிநாட்டினர்களை நாட்டிற்குள் நுழைய கடந்த வியாழக்கிழமை தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது.

இதன் விளைவாக, உம்ரா பயணம் செய்ய ஏற்கெனவே தத்தம் நாடுகளிலிருந்து புறப்பட்டுவிட்ட ஆயிரக்கணக்கான யாத்ரிகர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

அந்நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் புனித ஹஜ்ஜு யாத்திரை வழக்கம்போல நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இவ்வாண்டு ஹஜ்ஜு யாத்திரை ஜூலையில் நடைபெறவுள்ளது.

சவூதியில் இதுவரை கொரோனா கிருமித்தொற்று சம்பவம் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், மத்திய கிழக்குப் பகுதியில், குறிப்பாக ஈரானில் கிருமித்தொற்று சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வரும் வேளையில், கிருமி பரவலைத் தடுக்க சவூதி அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

ஹரம் ஷரீஃப் பள்ளிவாசலில் நாள் ஒன்றுக்கு நான்கு முறை தரை கழுவப்படுவதாகவும் தொழுகைக்குப் பயன்படுத்தும் 13,500 தரை விரிப்புகள் அடிக்கடி சுத்தப்படுத்தப்படுவதாகவும் சவூதி பிரஸ் ஏஜென்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

#கொரோனா #சவூதி #உம்ரா

குறிப்புச் சொற்கள்