மலேசிய அரசியல்: அதிரடி திருப்பங்களின் பின்னணி

2 mins read
ac97b0cd-ee44-4fc3-b023-467ff9ac1b84
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது. படம்: ஏஎஃப்பி -

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி வீழ்ச்சிக்குக் காரணமான ஒரு வார அரசியல் திருப்பங்களின் பின்னணியில் என்ன நடந்தது என்பது பற்றி அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மதுவின் முன்னாள் பத்திரிகை செயலாளர் ஆடம் முக்ரிஸ் முகமது முகைதீன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் வீழ்ச்சி கடந்த 23ஆம் தேதி ஆரம்பமானது என்றார் அவர்.

அவர் நேற்று வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், "பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலியின் ஆதரவாளர்கள் ஷெரட்டன் ஹோட்டலில் சந்தித்தபோது, ​பெர்சத்துவின் உச்ச மன்றக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.

பெர்சத்துவின் அக்கூட்டத்தில், தன் கொள்கைகளின் அடிப்படையில் அம்னோவுடன் இணைந்து பணியாற்ற டாக்டர் மகாதீர் மறுத்துவிட்டார். ஆனால் கட்சியில் இருந்து தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதை அவர் ஏற்றுக்கொண்டதாக," குறிப்பிட்டிருந்தார்.

"அப்போது வெகு சில பெர்சத்து உறுப்பினர்களே மகாதீருக்கு ஆதரவாக இருந்தனர்.

"மகாதீர் முடிவெடுப்பதற்கு அவகாசம் அளிக்கும் வகையில், இந்த முடிவு சற்று நிறுத்தப்பட்டது. அப்போது மகாதீர் தனது எண்ணத்தை மாற்றிக்கொள்வார் என்று அப்போதைய பிகேஆர் கட்சியைச் சேர்ந்த அஸ்மினும் நம்பிக் கொண்டிருந்தார்.

"அன்று இரவு நடந்த கூட்டத்தின்போது தெங்கு அட்னான் மன்சோர் ஒரு அமைச்சர் போல வந்தார், கூட்டம் பிரிந்தது.

"அப்போது அனைவரும் எந்த அமைச்சை தேர்ந்தெடுப்பது என்ற நிலையில் இருந்தார்கள். அடுத்த நாள் பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் மகாதீரைச் சந்திக்க சென்றனர்.

"அதற்கு முன் வரை பக்கத்தான் தலைவர்கள் டாக்டர் மகாதீரை ஒரு கெட்டவராக பார்த்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை இதையெல்லாம் மகாதீர் தான் திட்டமிட்டதாக நினைத்தார்கள். அது பின்வாசல் அரசாங்கமோ அல்லது ஷெரட்டன் நகர்வோ.

"சந்திப்பிற்குப் பிறகு மகாதீர் நேர்மையானவர், கொள்கை ரீதியானவர் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். ஆனால் அதற்குள் மகாதீர் பதவி விலகல் கடிதத்தை கொடுத்திருந்தார்.

"பெர்சத்து கூட்டணியிலிருந்து விலகிவிட்டதால், அவரால் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு தலைமை வகிக்க முடியாது என்ற காரணத்தால் மகாதீர் பிரதமராகவும் நீடிக்க விரும்பவில்லை.

"மேலும் முகைதீன் யாசினின் நிலைப்பாட்டை ஏற்காததால் பெர்சத்து தலைவர் பதவியில் இருந்து விலகிய மகாதீர், அம்னோ அரசாங்கத்திற்கு பிரதமராகவும் விரும்பவில்லை.

"இதற்கிடையே அன்வார் பிரதமராக பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றத்தைக் கூட்ட சபாநாயகர் மறுத்துவிட்டார்.

"இதையடுத்து, மீண்டும் மகாதீரை ஆதரிக்க பக்கத்தான் தலைவர்கள் முன் வந்தனர். சில நிபந்தனைகளுடன் மகாதீரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

"அதற்குள் அம்னோ, பாஸ் கட்சிகளுடன் சேர்ந்து பெர்சத்து, முகைதீன் யாசினைப் பிரதமராக பரிந்துரைத்தது. அதனால் தான் மகாதீர் மறுத்துவிட்டார்," என்று முக்ரிஸ் சொன்னார்.

பெர்சத்து, பிகேஆர் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகியதால் பக்கத்தான் ஹரப்பான் வீழ்ந்ததையடுத்து, பெர்சத்துவின் முகைதீன் யாசின் நேற்று முன்தினம் பிரதமராகப் பொறுப்பேற்றார்.