இந்தியாவில் இருவருக்கு கிருமித்தொற்று பாதிப்பு
பெங்களூரு: இந்தியாவில் இருவருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டு இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. புது டெல்லியில் பாதிக்கப்பட்டவர் இத்தாலிக்கும் தெலுங்கானாவில் பாதிக்கப்பட்டவர் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் சென்றதாகக் கூறப்படுகிறது. இருவரின் உடல்நிலையும் சீராக உள்ளதென தெரிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய சமூகத்தில் கிருமித்தொற்றுப் பரவல்
சிட்னி: ஆஸ்திரேலியர்களான 31 வயது ஆண் மருத்துவருக்கும் 41 வயது மாது ஒருவருக்கும் கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கிருமித்தொற்று பரவல் சமூக அளவில் ஏற்பட்டுள்ள முதல் சம்பவங்கள் இவை என்று கூறப்படுகிறது.
தாய்லாந்தில் 43 கிருமித்தொற்று சம்பவங்கள்
பேங்காக்: தாய்லாந்தில் மேலும் ஒரு புதிய கொரோனா கிருமித்தொற்று சம்பவம் நேற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து தற்போதைய நிலவரப்படி அங்கு 43 கிருமித்தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. புதிதாக உறுதிசெய்யப்பட்டவர் 22 வயது தாய்லாந்து பெண் என்றும் அவர் கிருமித்தொற்று பாதிப்புக்குள்ளான இன்னொருவருடன் பணியாற்றினார் என்றும் கூறப்பட்டது. இதுவரை 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவில் இரண்டாவது மரணம்
சியேட்டல்: அமெரிக்காவில் கொரோனா கிருமித்தொற்றுக்கு இரண்டாவது உயிர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவருக்கு வேறு சுகாதாரப் பிரச்சினைகள் இருந்தன.
தாக்கத்தைக் கட்டுப்படுத்த 'ஜி7' நாடுகள் பேச்சு
பாரிஸ்: கொரோனா கிருமி பொருளியலில் ஏற்படுத்தும் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஜி7 நாடுகள் ஒருமித்த முயற்சியை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த முயற்சியை எப்படி வெற்றிகரமாக நிறைவேற்றலாம் என்பது பற்றி இந்த நாடுகளின் நிதி அமைச்சர்கள் இந்த வாரம் தொலைபேசி மூலம் விவாதிப்பார்கள். பிரான்ஸ் நிதி அமைச்சர் புருணோ லி மேரி இவ்வாறு தெரிவித்து இருக்கிறார்.
'வளைகுடா நாடுகளுக்கு கிருமியைப் பரப்ப வேண்டாம்'
துபாய்: குவெத்தில் மேலும் 10 கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதியானதை அடுத்து, அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆகி உள்ளது. வளைகுடா நாடுகளுக்குக் கிருமி பரவாமல் இருப்பதற்கு கூட்டங்களைத் தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஹொக்காய்டோவில் மட்டும் 77 சம்பவங்கள்
தோக்கியோ: ஜப்பானில் நேற்று மேலும் 5 கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டன. அவை எல்லாமே ஹொக்காய்டோ பகுதியில் பதிவாகியவை. அண்மையில் அவசரநிலை அறிவித்த ஹொக்காய்டோவில் மட்டும் தற்போது 77 கிருமித்தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. ஜப்பானில் மொத்தம் 261 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஈரானில் வீடு வீடாகச் சென்று சோதனை
தெஹரான்: கொரோனா கிருமித்தொற்றால் ஈரானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54ஐ எட்டியுள்ள நிலையில், இன்றுமுதல் அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று மக்களைச் சோதனையிடவுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் கூறினார். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 385 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதியாகின.

