கொவிட்-19க்கு எதிரான போரை அறிவித்தது தென்கொரியா

2 mins read
fd5b2380-471a-462a-9cdf-169b51d16b9b
முகக்கவசங்களுக்கான தட்டுப்பாடுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட தென்கொரிய அதிபர், கிருமித்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிறிய வர்த்தகங்களுக்கு உதவ  அமைச்சரவைக் கூட்டத்தில் பேசியபோது உறுதியளித்தார். படம்: இபிஏ -

தென்கொரியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000ஐ தாண்டியுள்ளதை அடுத்து, தென்கொரிய அதிபர் கொவிட்-19க்கு எதிரான போரை அறிவித்துள்ளார்.

மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள், முகக்கவசங்கள் போன்றவற்றைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முகக்கவசங்களுக்கான தட்டுப்பாட்டுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட அவர், கிருமித்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிறிய வர்த்தகங்களுக்கு உதவ அமைச்சரவைக் கூட்டத்தில் பேசியபோது உறுதியளித்தார்.

அங்கு இதுவரை 4,812 பேருக்கு சளிக்காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பதாகவும் 34 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டோரில் சுமார் 90% டேகு மற்றும் அதன் அருகில் உள்ள நார் ஜெயோங்சாங் மாகாணம் ஆகிய இடங்களில் இருப்பதாக கொரிய நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு நிலையம் தெரிவித்தது.

பாதிக்கப்பட்டோரில் பாதிக்கும் மேற்பட்டோர் டேகு நகரில் உள்ள ஷின்சியோன்ஜி சர்ச் ஆஃப் ஜீசஸ் தேவாலயத்துடன் தொடர்புடையவர்கள். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, அந்த அமைப்பின் 190,000 உறுப்பினர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பரிசோதனைக்கு உட்படாவிட்டால் கைது செய்யப்படலாம் என்று மிரட்டிய பிறகு பரிசோதனைக்கு உட்பட்ட அந்த தேவாலயத்தின் தலைவர் லீ மான் ஹீ, 88, கிருமித்தொற்றால் பாதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.

தேவாலயத்தின் வழியாக கிருமித்தொற்று பரவியதற்காக நேற்று (மார்ச் 2), இரு முறை தலை தாழ்த்தி மன்னிப்புக் கோரிய திரு லீ, கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்துக்கு தமது அமைப்பு ஒத்துழைப்பு நல்குவதை வலியுறுத்தினார்.

திரு லீ மற்றும் அந்த தேவாலயத்தின் தலைவர்கள் மீது கொலை உள்ளிட்ட பிற குற்றச்சாட்டுகளை சோல் நகர அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

#கொரோனா #தென்கொரியா #தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்