'இவ்வளவு வேகமாகப் பரவும் கிருமியை இதுவரை பார்த்ததில்லை'

2 mins read
f6e19fa8-9117-4a4b-8115-e4c647ce7194
கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமித்தொற்று 73 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 90,000க்கும் அதிகமானோரைப் பாதித்துள்ள வேளையில், பொது சுகாதார அதிகாரிகள் இதற்குமுன் கண்டிராத சூழ்நிலையை எதிர்நோக்குவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் ஜிப்ரியிஸஸ் கூறியுள்ளார். ஏஎஃப்பி -

கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமித்தொற்று 73 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 90,000க்கும் அதிகமானோரைப் பாதித்துள்ள வேளையில், பொது சுகாதார அதிகாரிகள் இதற்குமுன் கண்டிராத சூழ்நிலையை எதிர்நோக்குவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் ஜிப்ரியிஸஸ் கூறியுள்ளார்.

கடந்த டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கிருமித்தொற்று, இப்போது அண்டார்டிகாவைத் தவிர்த்து அனைத்து கண்டங்களுக்கும் வேகமாகப் பரவிவிட்டது.

சீனாவை அடுத்து கிருமித்தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள தென்கொரியா, ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளில் கிருமி பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவ ஊழியர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

இதே நிலைமை தங்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, மற்ற நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அவற்றில் ஒன்றாக, பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நாள் வரை, சீனாவுக்கு வெளியே 172 மரணங்கள் பதிவாகியுள்ளன. சீனாவையும் சேர்த்து, உலகம் முழுவதும் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,100ஐ தாண்டிவிட்டது.

கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பல நாடுகளில் கிருமி பரவலைக் கட்டுப்படுத்த பள்ளிகளை மூடுவது, ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய ஊக்குவிப்பது, மக்கள் கூட்டம் ஒன்றுகூடும் நிகழ்ச்சிகளை ரத்து செய்வது அல்லது ஒத்திவைப்பது உள்ளிட்ட பல ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளன.

உலக சுகாதார நிறுவனம், கொரோனா கிருமித்தொற்றை உலகளாவிய தொற்றாக என்று இதுவரை வகைப்படுத்தவில்லை என்றாலும், கூடிய விரைவில் அது அவ்வாறு வகைப்படுத்தப்படலாம் என்று எச்சரித்துள்ளது.

"மனிதர்களுக்கு இடையே வேகமாகப் பரவும் ஆற்றல் கொண்ட இதுபோன்ற ஒரு கிருமியை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை. எனினும், சரியான நடைமுறை மூலம் கிருமி பரவலைக் கட்டுப்படுத்த முடியும்," என்று டாக்டர் டெட்ரோஸ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்