'மூன்று நாடுகளில் சுகாதாரப் பராமரிப்பு வலுவாக இல்லை'

2 mins read
cf423954-8445-400f-9e23-c15a6649f8cb
-

வாஷிங்டன்: சீனாவுக்கு அடுத்ததாக கொரோனா கிருமி அதிவேகமாகப் பரவி வரும் இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில் சுகாதாரப் பராமரிப்பு போதுமான அளவில் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

அந்நிறுவனத்தின் பேச்சாளரான டாக்டர் மார்க்ரெட் ஹாரிஸ், கிருமி பரவலைக் கட்டுப்படுத்தும் குழுவுடன் சேர்ந்து செயல்பட தற்போது ஜெனிவா திரும்பியுள்ளார்.

இபோலா நோயால் பாதிக்கப்பட்ட காங்கோ நாட்டிலிருந்து அவர் பணிக்குத் திரும்பியுள்ளார்.

"இபோலாவால் காங்கோ மோசமாக பாதிக்கப்பட்டது, 2,400 பேருக்கு மேல் மாண்டனர். ஆனால் கொரோனா கிருமி சில வாரங்களில் பலரைக் கொன்றுவிட்டது," என்று ஜெனிவாவிலிருந்து தொலைபேசி வழியாக 'த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் டாக்டர் டெட்ரோஸ் அதாநோம் கெப்ரியேசுஸ், 'கொவிட்-19' கிருமியையும் சாதாரண சளிக்காய்ச்சலையும் ஒப்பிட்டுப் பேசினார்.

"உலகம் முழுவதும் கொவிட்-19 கிருமியால் பாதிக்கப்பட்டவர்களில் 3.4 விழுக்காட்டினர் இறந்துவிட்டனர்.

"ஆனால் சாதாரண சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் விகிதம் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளது.

"கொவிட்-19 புதிய வகை கிருமியாக இருப்பதால் யாருக்கும் அந்நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி இல்லை," என்று அவர் தெரிவித்தார்.

இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய மூன்று நாடுகள் பற்றி கவலைப்படுவதாகவும் அவர் கூறினார்.

"பெரிய அளவில் கிருமி பரவியுள்ள மூன்று நாடுகளும் அதற்கு எதிராக போராடி வருகின்றன," என்றார் அவர். மூன்று நாடுகளிலும் சுகாதாரப் பராமரிப்பு முறைகள் வலுவாக இல்லாதது எங்களுக்கு மேலும் கவலையை ஏற்படுத்தி உள்ளது என்றும் அவர் கூறினார்.