ஏர் நியூசிலாந்து விமானத்தில் சிங்கப்பூரில் இருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்குப் பயணம் செய்த ஒருவருக்கு கொரோனா கிருமி தொற்றியிருப்பதை அந்த விமான நிறுவனம் உறுதி செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி அந்தப் பயணி, சிங்கப்பூரில் இருந்து ஆக்லாந்துக்கு 'என்இசட்283' என்ற விமானத்தில் பயணம் செய்தார்.
பின்னர் அவர் மார்ச் 2ஆம் தேதி என்இசட்5103 என்ற விமானத்தின் மூலம் ஆக்லாந்தில் இருந்து வடக்கு பால்மெர்ஸ்டன் நகருக்குச் சென்று அதே நாளில் 'என்இசட்8114' என்ற விமானத்தில் ஆக்லாந்துக்குத் திரும்பினார் என ஏர் நியூசிலாந்து விமான நிறுவனம் தனது இணையத் தளத்தில் பதிவேற்றிய ஒரு கடிதத்தில் கூறியுள்ளது.
பாதிக்கப்பட்ட பயணி பயணம் செய்த 'சிங்கப்பூர் - ஆக்லாந்து' விமானத்திலும் மற்ற இரண்டு விமானங்களிலும் உடன் பயணம் செய்த பயணிகளை அடையாளம் கண்டு அவர்களிடம் தொடர்புகொள்ளுவதற்கு நியூசிலாந்தின் சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்க முகவைகளுடன் அணுக்கமாக செயலாற்றி வருவதாக அந்த விமான நிறுவனம் கூறியது.
"ஏர் நியூசிலாந்து விமான நிறுவனம் பயணிகள் மற்றும் விமானச் சிப்பந்திகளின் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. விமானத்தின் ஒவ்வொரு பயணத்திற்குப் பின்பு இருக்கைகள், படத்திரை மற்றும் இருக்கையுடன் ஒட்டிய தட்டு மேசை போன்றவை கிருமி நாசினியைக் கொண்டு சுத்தம் செய்யப்படும்.
அத்துடன் காதில் மாட்டிக்கொள்ளும் ஒலிபெருக்கிக் கருவிகள், தலையணை உறை, போர்வை ஆகிய அனைத்தும் மாற்றப்படும். அத்துடன் விமானத்தில் உள்ள கழிவறைகளும் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்படும்," என்று ஏர் நியூசிலாந்து அதன் இணையத் தளத்தில் பதிவேற்றிய கடிதத்தில் தெரிவித்திருந்தது.

