எல்லாத் துறைக்கும் பிரதமரே பொறுப்பு

எல்லாத் துறைக்கும் பிரதமரே பொறுப்பு

2 mins read
a5df86c3-f88a-48e7-be34-cf3a7941b96a
மலேசியாவில் புதிய பிரதமராகப் பதவியேற்றிருக்கும் திரு முகைதீன் யாசின். படம்: ஏஎஃப்பி -

கோலாலம்பூர்: மலேசியாவில் புதிய பிரதமராகப் பதவியேற்றிருக்கும் திரு முகைதீன் யாசினுக்கு பெரும்பான்மை பலம் உள்ளதா என நிரூபிக்கப்படுவதற்கு இன்னும் இரண்டு மாதம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய பிரதமர் நாடாளுமன்றக் கூட்டத்தை மே 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்திற்குப் பின் அமைச்சர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்படும்.

அதுவரையிலும் மலேசியாவின் அனைத்து அமைச்சுகளின் பொறுப்புகளுக்கும் பிரதமர் முகைதீன் யாசின் பொறுப்பு வகிப்பார். இந்த அறிவிப்பு அந்நாட்டின் அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் திரு முகமது ஸுக்கி அலி கையெழுத்திட்டுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டம் 43வது அதிகாரத்தின்படி திரு முகைதீன் யாசினை பிரதமராக மாமன்னர் நியமித்துள்ளார். அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ள ஆணை 2020 மார்ச் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மலேசியாவில் அனைத்துத் துறைகளுக்கும் அமைச்சரவையில் அமைச்சர்கள் நியமிக்கப்படும் வரை பிரதமர் முகைதீன் யாசினே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

திரு முகைதீன், மார்ச் ஒன்றாம் தேதி பிரதமராகப் பொறுப்பேற்றார். அப்போதே அவர், கல்வி அமைச்சு, வெளியுறவுத்துறை அமைச்சு ஆகியவற்றுக்கான தலைமைச் செயலாளர்களை தனது அலுவலகத்தில் சந்தித்து நடப்பு விவகாரம் குறித்துப் பேசினார்.

அவர்களைச் சந்தித்த புகைப்படங்களை பிரதமர் முகைதீன் தனது ஃபேஸ்புக் தளத்தில் பதிவேற்றியுள்ளார். அந்தப் படத்தில் பிரதமர் அலுவலகத்தில் இருந்த மேசை, அலமாரிகளில் எவ்விதப் பொருட்களும் இன்றி காலியாக இருந்தன.

பிரதமர் முகைதீன் பதிவேற்றியிருந்த ஃபேஸ்புக் பதிவில், கல்வி அமைச்சின் தலைமைச் செயலாளர் டாக்டர் முகமது காஸாலி அபாஸ், அந்தத் துறையில் மேம்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்த சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதாக கூறியிருந்தார்.

அதேபோல் வெளியுறவுத் துறையின் தலைமைச் செயலாளர் முகமது ‌ஷாருல் இக்ரம் யாக்கோப்பிடம் உரையாடியது பற்றியும் தெரிவித்திருந்தார்.

மலேசியா எந்தெந்த நாடுகளுடன் அரசதந்திர உறவுகளைக் கொண்டுள்ளது என்றும் அனைத்துலக நாடுகளுடனான மாநாடுகள் என்னென்ன நிலுவையில் உள்ளன என்பது பற்றியும் தம்மிடம் திரு முகமது ‌‌ஷாருல் இக்ரம் விவரித்ததாக பிரதமர் முகைதீன் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

திரு முகமது ‌ஷாருலுடன் விவாதித்தவற்றுள் ஆசியா-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு (ஏபெக்) மாநாட்டு கருத்தரங்கு முக்கியமாகக் கருதப்படுகிறது. இது இந்த நவம்பர் மாதம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.