வாஷிங்டன்: செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிட அந்நாட்டின் முன்னோடித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனின் மேடையை நோக்கி சில ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்தனர்.
அவரை நோக்கி நெருங்கிய இருவரையும் பிடித்துத் தள்ளினார் ஜோ பைடனின் மனைவி ஜில். பின்னர் அந்த ஆர்ப்பாட்டக்காரர்களை திரு பைடனின் உதவியாளர்கள் அப்புறப்படுத்த, இந்த சம்பவத்தின் எதிரொலியாக ஜோ பைடனுக்கு ரகசிய உளவுத்துறை பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்தக் கோரிக்கையை திரு ஜோ பைடன் வெகு இலகுவாகக் எடுத்துக்கொண்டு நகைச்சுவையாக விமர்சித்தார் என்று செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
"அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்களிலேயே என் ஒருவனுக்குத்தான் என் மனைவியே ரகசிய பாதுகாப்பு வீரராக விளங்குகிறார்," என்று லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஒரு நிதி திரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரு பைடன் கூறினார்.
இதற்கு சற்றுமுன்னர்தான் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களுக்கு ரகசிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் நகைச்சுவையாக விமர்சித்த ஜோ பைடன், "என் மனைவி யாருக்காவது காயம் விளைவித்துவிடுவார் என்று அவர்கள் பயப்படுகின்றனர்," என்றவர் தொடர்ந்து, "என் தகுதிக்கு மேலான ஒருவரை நான் மணந்துள்ளேன்," என்றும் கூறினார்.
அமெரிக்க ரகசிய போலிஸ் துறை, அதிபர் தேர்தல் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்த பிரச்சினையில் வேட்பாளர்களிடமிருந்து முறையான கோரிக்கை வந்த பின்னரே அது குறித்து பரிசீலிக்கப்படும் என்பது நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையில், திரு ஜோ பைடனுக்கு அத்தகைய பாதுகாப்பு வழங்க முறையான கோரிக்கை விடப்பட்டதா என்பதை அவரது பிரசாரக் குழு தெரிவிக்க மறுத்துவிட்டது.

