ஊதியம் வழங்காமல் சூடு வைத்து சித்ரவதை செய்தனர்: மலேசியாவிலிருந்து மீட்கப்பட்ட கேரள ஆடவர் புகார்

2 mins read
4de67ccf-029b-4088-ae88-9fde71cdc942
தற்போது ஹரிதாசனுக்கு கேரளாவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படம்: இந்திய ஊடகம் -
multi-img1 of 2

மலேசியாவில் சித்ரவதைக்கு ஆளான கேரள ஊழியர் ஒருவர் மலேசிய மலையாளிகள் சமாஜத்தின் முயற்சியால் மீட்கப்பட்டார்.

அவர் உடலில் சூடு வைக்கப்பட்டதற்கான தழும்புகள், தலையில் காயங்கள் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் ஷொரனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதாசன். 45 வயதான இவர் மலேசியாவில் வேலை பார்க்கச் சென்றிருந்தார். அவரைப் பணிக்கு அமர்த்தியவர் மலேசியாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே குடியேறிய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். அங்கு பல நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஏழு மாதங்களாக ஹரிதாசனுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து ஊதியத்தை வழங்குமாறு அவர் கேட்டதால் ஆத்திரம் அடைந்த முதலாளி கடுமையாகத் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

சில நாட்கள் உணவு தராமலும், பின்னர் ஓர் அறையில் 26 நாட்கள் அடைத்து வைத்தும் தம்மை பணிக்கு அமர்த்தியவர் கொடுமைப்படுத்தியதாக ஹரிதாசன் தெரிவித்துள்ளார்.

"நான் பணத்தை திருடியதாக குற்றம்சாட்டி விறகு கட்டைகளால் தாக்கினர். பின்னர் இரும்புக் கம்பியை பழுக்கக் காய்ச்சி உடல் எங்கும் சூடு வைத்தனர். இரண்டு நாட்கள் முழுவதும் உணவும் தண்ணீரும் கொடுக்காமல் கொடுமைப்படுத்தினர்.

"26 நாட்கள் அடைத்து வைத்ததால் எனது காயங்கள் மோசமடைந்தன. அதனால் கவலையடைந்த ஊழியர்கள் சிலர் என்னைப் புகைப்படம் எடுத்து உறவினர்களுக்கு அனுப்பி வைத்தனர்," என்று ஹரிதாசன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மலேசிய மலையாளிகள் சமாஜத்துக்கு இது குறித்து தகவல் கிடைக்கவே, அவர்கள் துரித நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனால் அவரைப் பணிக்கு அமர்த்தியவர் வேறு வழியின்றி ஹரிதாசன் நாட்டை விட்டு வெளியேற சம்மதித்துள்ளார்.

இதையடுத்து கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் ஹரிதாசனை மலையாளிகள் சமாஜம் சென்னைக்கு அனுப்பி வைத்தது.

சென்னை வந்த அவர், பின்னர் ரயில் மூலம் கேரளா புறப்பட்டுச் சென்றார்.

தற்போது அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#ஹரிதாசன் #மலேசியா #கேரள ஊழியர் #மீட்பு

குறிப்புச் சொற்கள்