கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைவர் பதவியைத் துறைந்த லத்தீஃபா கோயா, தான் மீண்டும் "மீண்டும் மனித உரிமை வழக்கறிஞராக வேண்டும் என்பதே எனது விருப்பம்," என்று அவர் கூறினார்.
லத்தீஃபா எம்ஏசிசி தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, பிகேஆர் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்தார். மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான லத்தீஃபா, நஜிப், ஸாஹிட் உள்ளிட்ட அம்னோ தலைவர்கள் சம்பந்தப்பட்ட பல உயர் விசாரணைகளைக் கையாண்டுள்ளார்.
ஆணையத்தின் பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் எம்ஏசிசி துணைத் தலைவர் அசாம் பாக்கியையும் சந்தித்து ஆணையத்தின் நடவடிக்கைகள் குறித்து லத்தீஃபா விளக்கியுள்ளார்.
நிலைப்பாடு அல்லது அரசியல் தலையீடு போன்றவற்றை பொருட்படுத்தாமல், ஊழலுக்கு எதிராக எம்ஏசிசி தொடர்ந்து போராடும் என்று தான் முழு நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அவர் சொன்னார்.
வழக்கு விசாரணை ஒன்றின் போது தன்னிடம் கிட்டத்தட்ட RM1 பில்லியன் (S$330 மில்லியன்) சொத்துகள் இருப்பதாக அம்னோவின் முன்னாள் தலைமை செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் வெளிப்படுத்தியதையடுத்து, அவர் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக லத்தீஃபா நேற்று முன்தினம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

