போர் நிறுத்தம்: துருக்கி, ரஷ்யா உடன்பாடு

போர் நிறுத்தம்: துருக்கி, ரஷ்யா உடன்பாடு

1 mins read
684a287e-2ea5-45f1-9bd3-0cc99c331054
இட்லிப் பகுதியில் சிரிய அரசுப் படைகள் தொடர் தாக்குதல் மேற்கொண்டன. இதில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் இட்லிப் பகுதியை விட்டு துருக்கி எல்லையை நோக்கி அடைக்கலம் நாடிச் சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் போர் நிறுத்தத்திற்கு துருக்கியும் ர‌ஷ்யாவும் இணங்கியுள்ளன. படம்: ஏஎப்பி -

இட்லிப்: சிரியாவின் இட்லிப் மாநிலத்தில் போர் நிறுத்தத்திற்கு துருக்கி அதிபர் எர்டோகனும் ரஷ்ய அதிபர் புட்டினும் இணங்கியுள்ளனர்.

ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் இட்லிப் மாநிலத்தில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில், சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பலியாகினர்.

இதன் காரணமாக துருக்கி மற்றும் சிரியப் படைகளுக்கு இடையே மோதல் வலுத்தது.

சில நாட்களுக்கு முன்னர் சிரிய ராணுவம், இஸ்புல்லா அமைப்பின் அதிகாரிகள் கலந்துகொண்ட சந்திப்பில், துருக்கி வான்வழித் தாக்குதல் நடத்தியதாக செய்தி வெளியானது.

தொடர்ந்து இட்லிப் பகுதியில் சிரிய அரசுப் படைகள் தாக்குதல் நடத்தின. இதில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியது.

மேலும், இட்லிப்பில் போர் நிறுத்தத்தை நடைமுறைபடுத்துமாறு ரஷ்ய அதிபர் புட்டினை துருக்கி அதிபர் எர்டோகன் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக வியாழக்கிழமையன்று ரஷ்யா சென்று புட்டினைச் சந்தித்தார் எர்டோகன்.

மாஸ்கோவில் நடைபெற்ற இச்சந்திப்பு சுமார் 6 மணிநேரம் நீடித்தது. இதன் முடிவில் இட்லிப்பில் போர் நிறுத்தத்தை புட்டினும் எர்டோகனும் அறிவித்தனர்.

இதுகுறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறும்போது, "வியாழக்கிழமை நள்ளிரவு முதல் போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும்.

"சிரிய அரசுப் படைகள் ஒருவேளை தாக்குதல் மேற்கொண்டால், துருக்கி அமைதியாக இருக்காது. பதில் தாக்குதலில் ஈடுபடும்," என்று தெரிவித்தார்.