பல நாடுகள் அலட்சியம்: உலக சுகாதார நிறுவனம் கவலை

பல நாடுகள் அலட்சியம்: உலக சுகாதார நிறுவனம் கவலை

1 mins read
e97ef1b4-57cd-44e4-ad4d-d02a4ad27405
பல நாடுகள் கிருமித்தொற்றைச் சமாளிக்கும் பொறுப்பை தங்களது சுகாதார அமைச்சிடம் பொறுப்புகளைத் தந்துவிட்டு அதை மட்டுமே நம்பி இருப்பதாகவும் அது தவறு என்றும் குறிப்பிட்ட திரு டெட்ரோஸ், ஒட்டுமொத்த அரசாங்கமும் இறங்கி வேலை செய்ய வேண்டிய தருணம் இது என்றார். படம்: இபிஏ -

பெய்ஜிங்: சீனாவில் தொடங்கிய கொரோனா கிருமித்தொற்று அமெரிக்கா, ஐரோப்பா என்று உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் வேளையில் பல நாடுகள் அதன் மீது போதுமான கவனம் செலுத்தவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் குறை கூறி உள்ளது.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கிப்ரியேசஸ் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாம் அனைவரும் எதிர்நோக்கி இருக்கும் மிரட்டலுக்கு இணையாக பல உலக நாடுகளின் நடவடிக்கை இல்லை. அவ்வாறு அலட்சியமாக இருக்கும் நாடுகளின் பட்டியல் நீளம். ஏழை, பணக்காரர் என்ற பேதமின்றி ஒவ்வொரு நாட்டிலும் கிருமித்தொற்று மிரட்டல் உள்ளது. இது ஒன்றும் பயிற்சி அல்ல.

"எனவே எல்லா நாட்டுத் தலைவர்களும் பொறுப்புகளைக் கையில் எடுத்துக்கொண்டு எல்லாத் துறையினரையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டியது அவசியம்.

"போர்க்கால ஆயத்தநிலைதான் இப்போதைய தேவை," என்றார் அவர்.

பல நாடுகள் கிருமித்தொற்றைச் சமாளிக்கும் பொறுப்பை தங்களது சுகாதார அமைச்சிடம் பொறுப்புகளைத் தந்துவிட்டு அதை மட்டுமே நம்பி இருப்பதாகவும் அது தவறு என்றும் குறிப்பிட்ட திரு டெட்ரோஸ், ஒட்டுமொத்த அரசாங்கமும் இறங்கி வேலை செய்ய வேண்டிய தருணம் இது என்றார்.

இதற்கிடையே, கிருமி பரவல் காலத்தில் பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் நடந்துகொள்வதை பொதுமக்களுக்கு வலியுறுத்தும் நோக்கில் 'கொவிட்-19ஐ எதிர்கொள்ளத் தயாராகுங்கள்' என்னும் பொருள்படும் சமூக ஊடகப் பிரசாரத்தைத் தொடங்கப்போவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.