கொரோனா கிருமித்தொற்று உலகின் பல நாடுகளில் வேகமாகப் பரவி வருவதையடுத்து, பல நாடுகளில் முகக்கவசம், கழிவறைத்தாள் போன்றவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது.
ஜப்பானில் முகக்கவசத்துக்காக தெருவில் சண்டையிட்டு உருளும் காணொளிகள்கூட அண்மையில் வலம் வந்தன.
ஆஸ்திரேலியாவின் பேரங்காடி ஒன்றில் கழிவறைத்தாள் வாங்குவதில் பெண்களுக்கிடையே நிகழ்ந்த சண்டையைக் காட்டும் காணொளியும் சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பரவியது. போலிசார் வந்து அந்தப் பெண்களைச் சமாதானப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று, கழிவறை மெல்லிழைத்தாள் உருளைகளை இணையம் வழியாக வாங்க ஆர்டர் செய்தபோது 48 உருளை என்பதற்குப் பதிலாக 48 பெட்டிகள் என்று தவறுதலாகக் குறிப்பிட்டுவிட்டது. எனவே 2,304 கழிவறைத்தாள் உருளைகள் அவர்களுக்கு வந்து சேர்ந்தன.
திருவாட்டி ஹைடி ஜேனட்ஸ்கி, திரு கிரிஸ் தம்பதியர், தங்களுக்கு வந்து சேர்ந்த கழிவறை மெல்லிழைத்தாள் பெட்டிகளைப் பார்த்த பிறகுதான் தங்களது கடன்பற்று அட்டையின் கட்டண ரசீதைப் பார்த்தனர்.
நிலைமையை உணர்ந்த அவர்கள், முதலில் எரிச்சலடைந்தாலும் பின்னர் சமாதானமாகினர்.
அந்த பெட்டிகளின் மீது தம் மனைவி அமர்ந்திருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட கிரிஸ், சம்பவத்தை விளக்கி இருந்தார்.
அவ்வளவு கழிவறைத்தாள்களையும் பயன்படுத்த தங்களுக்கு 12 ஆண்டு காலம் ஆகலாம் என்று குறிப்பிட்ட ஜேனட்ஸ்கி, தாங்கள் வாங்கிய விலைக்கே அவற்றை விற்று நிதி திரட்டுப் பணியில் ஈடுபட இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
#கழிவறைத்தாள் #கொரோனா

