சோல்: தென்கொரியாவில் மேலும் 448 பேருக்கு கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் மொத்தம் 7,041 பேர் அந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரியாவின் நோய் கட்டுப்பாட்டு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் இருவர் மரணம் அடைந்தனர்.
இதுவரை தென்கொரியாவில் 44 பேர் கொரோனா கிருமித்தொற்றுக்குப் பலியாகி உள்ளனர். டேகு நகரில் மட்டும் 5,000க்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
சீனாவுக்கு அடுத்தபடியாக தென்கொரியாவில்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமாகி வருவதால் கிருமித்
தொற்றை எதிர்கொள்ள தென்கொரிய அதிகாரிகள் கிருமிப் பரவலைத் தடுக்கவும் சுற்றுப்புறங்களைத் துப்புரவு செய்யவும் அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா கிருமித்தொற்று காரணமாக தென்கொரியாவில் இரண்டு அடுக்குமாடிக் கட்டடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
தென்கொரியாவில் கொரோனா கிருமித்தொற்று அதிகம் பரவுவதற்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் ஷின்சியோன்ஜி தேவாலயத்தின் உறுப்பினர்கள் பலர் அந்த இரு கட்டடங்களில் வசிப்பதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டங்களில் வசிக்கும் பலருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
டேகு நகரில் இருக்கும் அந்தக் கட்டடங்களில் வசிக்கும் 46 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
கட்டடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அந்தக் கட்டடங்களில் 140க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்களில் 94 பேர் தென்கொரியாவில் கிருமித்தொற்று அதிகம் ஏற்படக் காரணமாகக் கூறப்படும் ஷின்சியோன்ஜி தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள்.
கிருமித்தொற்று தொடர்பாக முதல்முறையாக குடியிருப்புக் கட்டடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக டேகு நகர மேயர் கிவோன் யங் ஜின் தெரிவித்தார். அந்தக் கட்டடங்கள் அரசாங்கத்துக்குச் சொந்தமானவை என்றும் அங்கு 35 அல்லது அற்கும் குறைவான திருமணமாகாத பெண்கள் மட்டுமே வசிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

