ஜினீவா: புதிதாகத் தோன்றியுள்ள கொரோனா கிருமியை எதிர்த்துப் போராடுவதில் உலக நாடுகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள உலக சுகாதார நிறுவனம், இந்தக் கிருமி வரும் கோடைக்காலத்தில் மறைந்துவிடும் என்று கூறுவதற்கு எவ்விதமான அறிகுறியும் தெரியவில்லை என்று கூறியுள்ளது. "வெவ்வேறு பருவநிலைகளில் இந்தக் கிருமி எவ்வாறு செயல்படும் என்று கூறமுடியாது," என்று தனது தினசரி செய்தியாளர் சந்திப்பில் உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ அவசரநிலைப் பிரிவின் இயக்குநரான டாக்டர் மைக்கல் ரயன் கூறியுள்ளார். அத்துடன், வரும் கோடை காலத்தில் இந்தக் கிருமி மற்ற சளிக்காய்ச்சல் கிருமிகளைப் போல் தானே மறைந்துவிடும் என அசட்டையாக இருக்க வேண்டாம் என நாடுகளை அவர் எச்சரித்தார். "இந்தக் கிருமி தொடர்ந்து பரவும் சக்தியைப் பெற்றுள்ளது என்று எண்ணி செயல்பட வேண்டும்," என அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இந்த கொரோனா கிருமித்தொற்று உலகில் அனைத்துப் பகுதிகளிலும் ஏற்படலாம் என்று டாக்டர் ரயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
'கோடைக்காலத்தில் கொரோனா கிருமி மறையும் அறிகுறி இல்லை'
1 mins read

