ஹனோய்: வியட்னாமில் மேலும் ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
இதன்படி, வியட்னாமில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது.
தென்கொரியாவின் டேகு நகரிலிருந்து வியட்னாம் திரும்பிய 27 வயது ஆடவர் வியட்னாமில் தரையிறங்கியதும் தனிமைப்படுத்தப்பட்டதாக அமைச்சு கூறியது.
ஐரோப்பாவிலிருந்து ஹனோய் திரும்பிய 26 வயது பெண்ணுக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக நேற்று முன்தினம் தெரியவந்தது.
அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அருகில் உள்ள தெருக்களைச் சுற்றி வியட்னாமிய அதிகாரிகள் தடுப்பு போட்டனர்.
அதனை அடுத்து, கிருமி நாசினியைப் பயன்படுத்தி அவ்விடங்கள் சுத்தம் செய்யப்பட்டன.
வியட்னாமில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் 16 பேர் குணமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டதாக வியட்னாமிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிருமித்தொற்று காரணமாக வியட்னாமில் மரணங்கள் ஏதும் நிகழவில்லை என்று அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படும் 101 பேரை வியட்னாம் தனிமைப்
படுத்தியுள்ளது.

