கோலாலம்பூர்: கொரோனா கிருமித்தொற்று காரணமாக விமானச் சேவைகளின் பயணங்கள் குறைந்துள்ளன. இதனால் விமானச் சேவைகளின் வருமானத்தில் சரிவு காணப்பட்டுள்ளது. இந்நிலையில், மலேசியாவின் மலிண்டோ ஏர் விமானச் சேவை அதன் ஊழியர்களின் சம்பளத்தை பாதியாகக் குறைத்துள்ளது. அதுமட்டுமல்லாது, இரு வாரங்களுக்கு சம்பளமில்லா விடுப்பில் செல்ல ஊழியர்களை மலிண்டோ ஏர் பணித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வருமானச் சரிவை எதிர்கொள்ள மலிண்டோ ஏர் விமானச் சேவை பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியிருப்பதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி முசாஃபிஸ் முஸ்தஃபா பக்ரி நேற்று முன்தினம் தெரிவித்தார்.
விமானச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், விநியோகிப்பாளர்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தை ஒத்திவைப்பது குறித்து விண்ணப்பித்தல், சம்பளமில்லா விடுப்பில் செல்ல ஊழியர்களைப் பணித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

