காபூல்: ஆப்கானிஸ்தானில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. இந்தத் தகவலை ஆப்கான் சுகாதார அமைச்சு நேற்று உறுதி செய்தது.
"ஆப்கானிஸ்தானின் மேற்கு மாநிலமான ஹீரத்தில் மூன்று பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கிறது," என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் ஆப்கான் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
தலைநகர் காபூலில் 36 பேருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் அவர்களில் 33 பேருக்கு கிருமித்தொற்று ஏற்படவில்லை என்று தெரியவந்ததாகவும் அமைச்சு கூறியது.
கொரோனா கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரானும் ஒன்று. அங்கு 4,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கிருமித்தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான ஈரானில் மில்லியன் கணக்கான ஆப்கானியர்கள் வேலை செய்கின்றனர். அரசியல், பொருளாதார நெருக்கடியால் அவர்கள் ஆப்கானிஸ்தான் திரும்பும் சாத்தியம் இருப்பதாக ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் ஆப்கானில் கொரோனா கிருமித்தொற்று மோசமடையும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது. அதுமட்டுமல்லாது, ஏற்கெனவே நிதி நெருக்கடியை எதிர்நோக்கும் ஆப்கான் சுகாதாரப் பராமரிப்புத் துறை, பலருக்கு மருத்துவப் பரிசோதனைகளை நடத்த சிரமப்படும் என்று கூறப்படுகிறது.

