மணிலா: பிலிப்பீன்சில் முதல் சமூக அளவிலான கிருமிப் பரவல் நிகழ்ந்திருப்பதாக அந்நாட்டின் மருத்துவ அதிகாரிகள் நேற்று உறுதி செய்தனர்.
இதையடுத்து பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட வேண்டும் என்று பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டேவுக்கு பிலிப்பீன்ஸ் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
62 வயது பிலிப்பீன்ஸ் ஆடவருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் அண்மையில் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கவில்லை. அவரது 59 வயது மனைவிக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் அரசாங்க மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதன் மூலம் பிலிப்பீன்சில் மொத்தம் ஆறு பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. பிலிப்பீன்சின் சுகாதார அமைச்சு சிவப்பு நிற விழிப்புநிலையை அறிவித்துள்ளது.

