சீனாவில் கட்டடம் இடிந்து விழுந்து பத்து பேர் உயிரிழப்பு

சீனாவில் கட்டடம் இடிந்து விழுந்து பத்து பேர் உயிரிழப்பு

2 mins read
ab67a69f-1471-4371-ae0e-8fc7e9304236
இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கிய 70 பேரில் 43 பேரை மீட்புக் குழுவினர் பத்திர மாக மீட்டனர். படம்: ராய்ட்டர்ஸ் -

பெய்ஜிங்: கொவிட்-19 கிருமித் தொற்று தொடர்பில் கண்காணிப்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தங்கு விடுதி இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பலியாகினர்.

இந்த விபத்தின்போது சுமார் 70 பேர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்ததாகவும் நேற்று காலை நிலவரப்படி அவர்களில் 43 பேர் மீட்கப்பட்டதாகவும் அவர்களில் 36 பேர் சிகிச்சைக்காக மருத்துவ

மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவசரகால நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. மற்றவர்களைக் காப்பாற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலை வேளையில் இந்த கட்டடம் இடிந்து விழுந்தது தொடர்பில் அதன் உரிமையாளரான யாங் என்பவருக்கு போலிசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட இக்கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தின் போது அதன் முதல் தளத்தில் சீரமைப்புப் பணிகள் நடந்துகொண்டிருந்ததாக சின்ஹுவா செய்தி தெரிவிக்கிறது.

இதற்கிடையே, சீனாவில் கிருமித் தொற்றால் புதிதாக 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 27 பேர் பலியானதாகவும் தேசிய சுகாதார ஆணையம் நேற்று தெரிவித்தது. அதாவது சென்ற ஜனவரி மாதத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்களின் எண்ணிக்கை குறைவாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கிருமித் தொற்று சம்பவங்கள் அனைத்தும் வூஹான் நகருக்கு உட்பட்டதாகவே உள்ளது.

தடையை நீக்க வலியுறுத்து

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக சீனாவில் கிருமித் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதாலும் சில நகரங்கள் எந்தவொரு புதிய கிருமித் தொற்று சம்பவம் பதிவாகாத நிலையிலும், நகரம் முடக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

கிருமி வேகமாக பரவத் தொடங்கியதைடுத்து, கடந்த ஜனவரி மாதம் சீனாவின் ஹுபெய் மாநிலம் உள்ளிட்ட இதர பல நகரங்களும் மூடப்பட்டன.

இதனால் ஹுபெய் மாநிலத்தில் சுமார் 56 மில்லியன் மக்கள் சுமார் 40 நாட்களாக வீட்டைவிட்டு வெளியே வராமல் முடங்கியுள்ளனர்.

சீனாவின் வீபோ சமூக ஊடகத்தில், 'ஹுபெயில் எப்போது தடை நீக்கப்படும்' என்ற ஹேஸ்டேக் சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குழுவாக மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படலாம் என்ற யோசனையையும் சிலர் முன்மொழிந்துள்ளனர்.

இக்கிருமித்தொற்றால் சீனாவில் 80,600க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,000க்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டனர்.

உலகளவில் ஒரு லட்சம் பேர் கிருமித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 3,500ஐ தாண்டியது.