மலேசியா: புதிய அமைச்சரவை அறிவிப்பு

மலேசியா: புதிய அமைச்சரவை அறிவிப்பு

2 mins read
70d044f6-7cd8-49da-bb3e-9c0a720af6c5
புத்ராஜெயாவிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் புதிய அமைச்சரவை பட்டியலை அறிவித்தார் மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின். படம்: ஏஎஃப்பி -

மலேசியாவின் எட்டாவது பிரதமராக சென்ற வாரம் பதவியேற்ற முகைதீன் யாசின், பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த புதிய அமைச்சரவைப் பட்டியலை இன்று (ஜனவரி 9) வெளியிட்டார்.

இதன்படி, மலேசியாவில் துணைப் பிரதமர் என்ற பதவி இனி இல்லை. அதற்குப் பதிலாக நான்கு மூத்த அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று திரு முகைதீன் அறிவித்தார்.

சிங்கப்பூர், இந்தோனீசியா ஆகிய நாடுகளைப் போல் ஒருங்கிணைப்புக்கென உதவ இந்த நான்கு மூத்த அமைச்சர்களைத் திரு முகைதீன் தேர்ந்தெடுத்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் கூறியிருந்தது.

நான்கு மூத்த அமைச்சர்களை நியமிப்பதன்வழி, தரமான சேவையை வழங்கும் ஒரு திறமையான அமைச்சரவை அமைந்திடும் என்பது பிரதமர் முகைதீனின் எண்ணம்.

"பிரதமரான எனக்கு இந்த மூத்த அமைச்சர்கள் உதவுவர். நான் நாட்டில் இல்லாதபோது அமைச்சரவை கூட்டங்களை இவர்கள் ஏற்று நடத்துவர். இவர்கள் இருப்பதால், துணைப் பிரதமர் என்ற பதவி தற்போது தேவை இல்லை," என்றார் திரு முகைதீன்.

நேரடி ஒளிபரப்பான செய்தியாளர் கூட்டத்தில் அவர் தமது புதிய அமைச்சரவையை அறிவித்தார்.

திரு முகைதீனின் பிரிபூமி பெர்சத்து மலேசிய கட்சி (பெர்சத்து), மற்றும் அம்னோ கட்சி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் புதிய அமைச்சரவையில் பெரும்பான்மையாக இருந்தனர்.

பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான அஸ்மின் அலி, அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு மூத்த அமைச்சராக உள்ளார்.

தற்காப்புக்கான மூத்த அமைச்சராக அம்னோ கட்சியின் துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுப்பணித் துறைக்கான மூத்த அமைச்சராக ஃபடில்லா யூசோஃப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சரவாக்கின் ஆளும் கபுங்கான் கட்சியின் ஆக மூத்த எம்.பி. இவர்.

கல்வித் துறைக்கு மூத்த அமைச்சராக பெர்சத்து கட்சியைச் சேர்ந்த முகம்மது ராட்ஸி ஜிடின் பணியாற்றுவார்.

முன்னாள் தற்காப்பு அமைச்சரும் அம்னோ கட்சியின் முன்னாள் துணைத் தலைவருமான ஹிஷாமுதீன் ஹுசேன், புதிய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுகளில் தற்போது சிக்கியுள்ள அரசியல்வாதிகளுக்குத் தம் அமைச்சரவையில் இடமில்லை என்று சென்ற வாரம் பிரதமராக பதவியேற்று தாம் ஆற்றிய முதல் உரையில் குறிப்பிட்டிருந்தார் திரு முகைதீன்.

இதன்படி, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அம்னோ தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி மற்றும் அக்கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் அட்னான் மன்சூர் ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெறத் தகுதியற்றவர்கள்.

"நேர்மையான அமைச்சரவையை உறுதிசெய்வதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் போலிசும் அனைத்து உறுப்பினர்களையும் ஆராய்ந்தன," என்றார் பிரதமர் முகைதீன்.

குறிப்புச் சொற்கள்