இந்தியாவில் மூன்று வயது குழந்தைக்கு கொரோனா கிருமித்தொற்று; மொத்தம் 41 பேர் பாதிப்பு

1 mins read
169576d6-096e-4ab2-9f10-c05b7c5d286d
இந்தியா-பங்ளாதேஷ் எல்லையில், பங்ளாதேஷ் ஆடவரின் உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்கும் சுகாதார ஊழியர். படம்: ஏஎஃப்பி -

இந்தியாவில் மூன்று வயது குழந்தை ஒன்று கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியிலிருந்து துபாய் வழியாக கொச்சி வந்த அக்குழந்தைக்குக் கிருமி தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இக்குழந்தையையும் சேர்த்து, இந்தியாவில் மொத்தம் 41 பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று வயது குழந்தையுடன் இத்தாலிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பெற்றோர் இம்மாதம் 3ஆம் தேதி கொச்சி திரும்பினர்.

அப்போது விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட உடல் வெப்பநிலை பரிசோதனையில் அக்குழந்தைக்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், உடனே எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அக்குழந்தை சேர்க்கப்பட்டது. இதையடுத்து, அக்குழந்தையுடன் பயணம் செய்த பயணிகள், விமானச் சிப்பந்திகள் ஆகியோருடன் அதிகாரிகள் தொடர்புகொண்டு விவரங்களைச் சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்குழந்தையின் பெற்றோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடைய ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

விமான நிலையத்தில் அக்குழந்தையுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த விமான நிலைய ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டு கண்காணிப்பின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாகுழந்தை