கோலாலம்பூர்: மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக திரு அசாம் பக்ரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன் ஆணையத்தின் துணைத் தலைவராகப் பதவி வகித்தார்.
ஆணையத்தின் தலைமை ஆணையராக இருந்த திருவாட்டி லத்தீஃபா கோயா அண்மையில் பதவி விலகியதைத் தொடர்ந்து திரு அசாம் பக்ரியிடம் தலைமை பொறுப்பு வழங்கப்பபட்டுள்ளது.
இந்தத் தகவலை மலேசியப் பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்டது.
திருவாட்டி லத்தீஃபா கோயாவின் பதவி விலகல் கடிதத்தை மலேசியாவின் மாமன்னர் ஏற்றுக்கொண்டதாகப் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையராக பதவி வகித்து சேவையாற்றி திருவாட்டி லத்தீஃபா கோயாவுக்கு மலேசிய அரசாங்கம் நன்றி தெரிவித்துக்கொண்டது.
திரு அசாமின் நியமனத்தை மலேசிய மாமன்னர் ஏற்றுக்கொண்டதாகவும் மலேசியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
மலேசியாவில் ஆகச் சிறந்த ஊழல் தடுப்பு அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்படும் திரு அசாம் கடந்த 30 ஆண்டுகளாக ஆணையத்தில் பணியாற்றி வருவதாக மலேசியாவின் தி ஸ்டார் நாளிதழ் தெரிவித்தது.
1984ஆம் ஆண்டில் அப்போதைய ஊழல் தடுப்பு அமைப்பின் உளவியல் பிரிவில் உதவி புலனாய்வு அதிகாரியாக அவர் இணைந்தார். 2000ஆம் ஆண்டில் அவர் அமைப்பின் பேராக் மாநில அலுவலகத்தில் அவர் பணியாற்றினார்.
2007ஆம் ஆண்டில் ஊழல் தடுப்பு அமைப்பின் தலைமையகத்திற்குத் திரு அசாம் மாற்றப்பட்டார். அங்கு அவர் கிள்ளான் துறைமுக இலவச வட்டார மோசடியை விசாரணை செய்த சிறப்புப் பணிக்குழுவுக்குத் தலைமை தாங்கினார்.
அதே ஆண்டில் உளவியல் பிரிவின் இயக்குநராக அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. 2015ஆம் ஆண்டில் அவர் புலனாய்வுத் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
1எம்டிபி வழக்கின் தலைமை அரசாங்க வழக்கறிஞராக தொடரும் கோபால் ஸ்ரீராம்
இதற்கிடையே 1எம்டிபி வழக்கின் தலைமை அரசாங்க வழக்கறிஞராக திரு கோபால் ஸ்ரீராம் தொடரலாம் என்று புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமைச் சட்ட அதிகாரி இட்ரிஸ் ஹருண் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு எதிரான 1எம்டிபி வழக்கின் தலைமை அரசாங்க வழக்கறிஞராக 76 வயது திரு கோபால் ஸ்ரீீராமை முன்னாள் தலைமைச் சட்ட அதிகாரி டாமி தாமஸ் நியமித்தார்.
1எம்டிபி வழக்கின் தலைமை அரசாங்க வழக்கறிஞராக தொடரும்படி புதிய தலைமைச் சட்ட அதிகாரி தமக்கு உத்தரவிட்டுள்ளதாக முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியான திரு கோபால் ஸ்ரீராம் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.
நேற்று நஜிப்பின் மனைவி ரோஸ்மா மன்சூருக்கு எதிரான ஊழல் வழக்கு நடைபெற்றது.

