ஜோ பைடனை ஆதரிக்கும் கமலா ஹாரிஸ்

ஜோ பைடனை ஆதரிக்கும் கமலா ஹாரிஸ்

2 mins read

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நவம்பரில் நடக்கிறது. அந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் மும்முரமாக ஆயத்தமாகி வருகின்றன.

கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்த இரண்டு கட்சிகளும் தங்கள் உள்கட்சித் தேர்தல்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட முன்வந்து இருக்கும் ஜோ பைடனுக்கு செனெட்டர் கமலா ஹாரிஸ் தனது ஆதரவைத் தெரிவித்து இருக்கிறார். அதேவேளையில், அந்தக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் பெர்னி சாண்டர்ஸ், மக்களின் உரிமைகளுக்கு குரல்கொடுப்பவரான ஜெஸ்சி ஜாக்சனின் ஆதரவைப் பெற்று இருக்கிறார்.

அமெரிக்காவை ஒன்றுபடுத்தும் ஆற்றல் இப்போதைய அதிபர் டோனல்ட் டிரம்ப்பைவிட பைடனுக்கு அதிகம் என்பதால், அவரை ஆதரிப்பதாக திருவாட்டி ஹாரிஸ் குறிப்பிட்டு உள்ளார்.

"ஜோ பைடன் அமெரிக்காவின் அதிபர் ஆக வேண்டும். இதற்கு மிக உற்சாகமான முறையில் ஆதரவு அளிக்க வேண்டும் என்று நான் முடிவு செய்து இருக்கிறேன்," என டுவிட்டரில் காணொளி மூலம் திருவாட்டி ஹாரிஸ் தெரிவித்தார்.

இதற்கு டுவிட்டரில் ஜோ பைடன் நன்றி கூறி இருக்கிறார். ஜோ பைடன் ஏற்கெனவே அமெரிக்காவின் துணை அதிபராக இருந்தவர். அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட ஜோ பைடன், 77, பெர்னி சாண்டர்ஸ், 78, ஆகியோருடன் பீட் புட்டிகீக் உள்ளிட்ட இதர பலரும் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். ஜோ பைடன், பெர்னி சாண்டர்ஸ் இருவரும் பல மாநிலங்களில் மாறிமாறி வெற்றி, தோல்விகளைச் சந்தித்து வருகிறார்கள்.

இதுவரை கிடைத்துள்ள ஆதரவை அடிப்படையாக வைத்து பார்க்கையில் ஜோ பைடனைவிட சாண்டர்ஸ் முன்னிலையில் இருக்கிறார் என்று தெரிகிறது.

கறுப்பு இன மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக சாண்டர்ஸ் அரும்பாடுபட்டு வருகிறார். அமெரிக்காவின் நவீன வரலாற்றைப் பார்க்கையில் குடிமக்களின் உரிமைகளுக்காகப் போராடும் மாபெரும் தலைவராக ஜாக்சனைப் பார்க்கிறேன் என்று சாண்டர்ஸ் தெரிவித்து வருகிறார்.

அமெரிக்கா முழுவதும் அதிக ஆதரவு பெறும் வேட்பாளரை ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழு தன்னுடைய அதிபர் தேர்தல் வேட்பாளராக முடிவுசெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகக் கட்சி ஒருபுறம் இருக்க, குடியரசுக் கட்சி சார்பில் இப்போதைய அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு மிக அதிக ஆதரவு இருப்பதால் அவரே அடுத்த தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.