தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எம்எச்17: விசாரணை தொடங்குகிறது

2 mins read
894e1e6b-78a5-4642-b988-c4844410b29c
நியாயம் கேட்டு அமைதிப் போராட்டம் நடத்திய உறவினர்கள். படம்: இபிஏ -

ஆம்ஸ்டர்டாம்: மலேசிய ஏர்லைன்ஸ் விமானமான எம்எச்17 சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேக நபர்கள் நால்வர் மீதான வழக்கு விசாரணை நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் தொடங்கவிருந்தது.

2014ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி உக்ரேனில் அந்த பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஐந்தரை ஆண்டுகள் கழித்து அந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை தொடங்குகிறது.

இதில் சம்பந்தப்பட்ட அந்தச் சந்தேக நபர்களில் ரஷ்யாவைச் சேர்ந்த மூவரும் உக்ரேனியர் ஒருவரும் அடங்குவர். எம்எச்17 விமானத்தைச் சுட்டு வீழ்த்த பயன்படுத்தப்பட்ட ரஷ்ய ஏவுகணைக்கு அந்த நால்வரும் ஏற்பாடு செய்திருந்ததாக அரசாங்க தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

சம்பவம் நிகழ்ந்த அந்த நாளில், ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு எம்எச்17 விமானம் பறந்துகொண்டிருந்தது. உக்ரேனிய எல்லையில் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து, அதிலிருந்த 298 பேரும் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தில் தனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என ரஷ்யா கூறி வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பில், நெதர்லாந்து வழிநடத்தும் அனைத்துலகக் கூட்டு விசாரணைக் குழு ஒன்று, பல ஆண்டுகளாக ஆதாரங்களைச் சேகரித்து வந்தது. அதைத் தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் நால்வருக்கும் கடந்த ஆண்டு கைதாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்திற்கும் தங்களுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என அந்த நால்வரில் ஒருவரான இகோர் கிர்கின் கூறியுள்ளார். இதன் தொடர்பில் கருத்து கேட்க மற்ற மூன்று சந்தேக நபர்களையும் தொடர்புகொள்ள முடியவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையில் பங்கேற்கும் நாடுகளான உக்ரேன், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா, பெல்ஜியம் ஆகியவை, நெதர்லாந்தில் வழக்கு விசாரணையை நடத்த 2017ஆம் ஆண்டில் ஒப்புக்கொண்டன.

இந்நிலையில், எம்எச்17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட வழக்கில் இந்தச் சந்தேக நபர்கள் நால்வரும் முதற்கட்ட குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவதாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

அந்த நபர்கள் தற்போது ரஷ்யாவில் இருப்பதாக நம்பப்படுகிறது. காணொளிவழி அவர்கள் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் விசாரணையில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பகட்ட வழக்கு விசாரணை இரு வாரங்களுக்கு நடைபெறும் எனச் சொல்லப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த ஆடவர்கள் நால்வருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

எனினும், இந்த விவகாரத்தில் தனது நாட்டு குடிமக்களை ரஷ்யா நாடு கடத்தாது என்று கூறப்படுகிறது.