ஐரோப்பாவின் நான்காவது பெரிய பொருளியல் நாடான இத்தாலி, கொவிட்-19 என்னும் கொரோனா கிருமித்தொற்றால் சீர்குலைந்துவிட்டது.
நாடு முழுவதையும் முடக்கி வைக்கும் உத்தரவு அங்கு நடப்புக்கு வந்துள்ளதால் அவ்வாறு முடக்கிவைக்கும் முதல் நாடாக இத்தாலி ஆகியுள்ளது.
கிருமித்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500ஐ நெருங்கிக்கொண்டு உள்ளதால் இத்தாலி முழுவதும் பீதியும் பயமும் உறைந்துள்ளன.
"இது நமக்கு இருண்ட காலம்," என்று நாட்டின் பிரதமர் கியுஸ்ப் கான்ட் தெரிவித்துள்ளார். "நாம் நமது பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியத்தில் உள்ளோம். எனவே நாடு முழுவதும் அர்ப்பணிப்பு முயற்சிகளைத் திணிக்க வேண்டிய கட்டாயம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டு உள்ளது," என்று திங்கட்கிழமை இரவு இத்தாலியப் பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டார்.
இத்தாலியில் இன்று காலை வரை 9,172 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது; 463 பேர் உயிரிழந்துவிட்டனர்.
பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் மரணமடைவோர் எண்ணிக்கையும் படுவேகமாக அதிகரித்தவண்ணம் உள்ளதால் மிலான் நகரைச் சுற்றியுள்ள வட்டாரத்தை முடக்கிவைக்கும் நடவடிக்கை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுவதாக பிரதமர் கான்ட் அறிவித்தார். அதனால் நாட்டில் உள்ள 60 மில்லியன் மக்களும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
உணவகங்களும் மதுக்கூடங்களும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்துவைத்திருக்க அனுமதிக்கப்படும் என்றபோதிலும் அங்கு உட்காருபவர்கள் இடையே 1 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
பள்ளிக்கூடங்களும் பல்கலைக்கழகங்களும் ஏப்ரல் 3 வரை மூடிவைக்க உத்தரவிடப்பட்டு உள்ளன.
திருமணம், மரண இறுதிச்சடங்கு உள்ளிட்ட மக்கள் கூடும் நிகர்வுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
சுகாதார அவசரநிலையைச் சமாளிக்க 10 பில்லியன் யூரோவை (S$16 பில்லியன்) இத்தாலி ஒதுக்கி உள்ளது. இதனை அந்நாட்டின் தொழில்துறை அமைச்சர் வானொலி யில் அறிவித்தார்.
ஐரோப்பிய வட்டாரத்தில் கொரோனா கிருமித்தொற்று பற்றிய விரிவான விவரங்களுக்கு நாளைய (மார்ச் 11) தமிழ் முரசின் அச்சுப் பிரதியை நாடுங்கள்!

