மலேசியாவின் எதிர்க்கட்சிக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தால் டாக்டர் மகாதீருக்குப் பதிலாக கெஆடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் பிரதமராகப் பதவியேற்கும் சாத்தியம் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணிக் கட்சிகள் இதுகுறித்து கலந்துரையாடப்போவதாகவும் பக்கத்தான் ஹரப்பான் மீண்டும் அரசாங்கத்தை அமைத்தால் அன்வார் பிரதமராகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் புளூம்பர்க் தொலைக்காட்சி நடத்திய பேட்டியின்போது திரு அன்வாரின் மனைவியும் மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறினார்.
பக்கதான் ஹரப்பான் கூட்டணியின் ஆட்சி கடந்த மாதம் கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியபோது டாக்டர் மகாதீர் பிரதமராகப் பதவியேற்றார்.
தகுந்த நேரம் வந்ததும் பிரதமர் பதவியை திரு அன்வார் இப்ராஹிமிடம் ஒப்படைக்கப்போவதாக அவர் கூறியிருந்தார்.
தமது நீண்டநாள் கனவு நனவாகப் பொறுமையுடன் காத்துக்கொண்டிருந்த அன்வாருக்கு அண்மையில் பேரிடி விழுந்தது. பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக ஆட்சி கலைந்தது.
இதற்கிடையே, பக்கத்தான் உறுப்பினர்கள் தொடர்ந்து மனுஉறுதியுடன் இருக்க வேண்டும் என்று திரு அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
"ஆட்சி கவிழ்ந்த நாளன்று நிகழ்ந்தவை பற்றி நான் கூட்டணித் தலைவர்களிடம் விளக்கிவிட்டேன். என்ன நடந்தாலும் இந்தக் கூட்டணி தொடர்ந்து ஒற்றுமையுடன் இருந்து மேலும் வலிமை பெறும்.
"பதற்றம் அடைய தேவையில்லை. மீண்டும் உற்சாகத்துடன் செயல்பட வேண்டும்," என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திரு அன்வார் பதிவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
கூட்டணியில் இருந்துகொண்டே துரோகம் செய்தோரைப் பற்றி மலேசியர்களுக்கு எடுத்துத்துரைக்க வேண்டும் என திரு அன்வார் தமது கூட்டணியினரைக் கேட்டுக்கொண்டார்.
"இலட்சியத்தையும் கொள்கைகளையும் கைவிட்டுவிடாதீர்கள். இம்மாதிரியான துரோகச் செயல்கள் மீண்டும் நிகழ அனுமதிக்காதீர்கள். துரோகம் இழைக்கக்கூடிய தலைவர்கள் இருந்தால் தயவுசெய்து கூட்டணியைவிட்டு சென்றுவிடுங்கள்," என்று திரு அன்வார் குறிப்பிட்டார்.
#மலேசியா #அரசியல் #அன்வார்


