புத்ராஜெயா: மலேசியாவின் புதிய அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், செனட்டர்கள் ஆகியோர் நேற்று பதவியேற்றனர்.
பதவியேற்பு விழா இஸ்தானா மெலாவத்தி தேசிய மாளிகையில் நடைபெற்றது.
மலேசியாவின் மாமன்னர் முன்னிலையில் நான்கு மூத்த அமைச்சர்கள் உட்பட 31 அமைச்சர்கள், 38 துணை அமைச்சர்கள், பதவிஏற்றுக்கொண்டனர்.
மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் திரு சரவணன் முருகன் மனிதவள அமைச்சராகப் பதவியேற்றார்.
அனைத்துலக வர்த்தக, தொழில் அமைச்சர் அஸ்மின் அலி, தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், பொதுப் பணி அமைச்சர் ஃபடில்லா இயூசோஃப், கல்வி அமைச்சர் டாக்டர் முகம்மது ரஸ்டி முகம்மது ஜிடின் ஆகியோர் மூத்த அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் முகைதீன் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளும்போது இந்த நால்வரும் அமைச்சரவையை வழிநடத்துவர்.
இம்முறை ஆறு செனட்டர்கள் நியமிக்கப்பட்டனர். புதிய செனட்டர்களும் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களில் சிஐஎம்பி தலைமை நிர்வாக அதிகாரி துங்கு சஃப்ரூல் துங்கு அப்துல் அசிசும் ஒருவர். அவர் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். செனட்டராக நியமிக்கப்பட்டுள்ள கூட்டரசுப் பிரதேசத்தின் முஃப்தி ஸுல்கிஃப்லி முகம்மது அல் பக்ரி மலேசியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சராகப் பொறுப்பு வகிப்பார்.
அரசியல்வாதி அல்லாதோருக்கு செனட்டர் பதவி கொடுத்து அமைச்சராக்கும் முறையை மலேசியா இதற்கு முன்பும் கையாண்டுள்ளது.
இதற்கிடையே, இதற்கு முன் சந்திக்காத பல சவால்களை புதிய அமைச்சர்கள் எதிர்நோக்குவர் என்று அம்னோவின் துணைத் தலைவர் முகம்மது ஹசான் தெரிவித்துள்ளார்.
இதனால் புதிய அமைச்சர்கள் தங்கள் முழுத் திறனையும் பயன்படுத்தி சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
புதிய பிரதமர், அமைச்சர்கள் ஆகியோர் தங்கள் திறனை நிரூபிக்க மலேசியர்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று திரு ஹசான் கேட்டுக்கொண்டார்.
புதிய அரசாங்கம் சந்திக்க இருக்கும் ஆகக் கடுமையான சவால்களில் கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுவது, நாட்டின் தேசிய பாதுகாப்பையும் பொருளியலையும் வலுப்படுத்துவது ஆகியவை அடங்கும் என்றார் அவர்.

