ஜகார்த்தா: 1940களில் இந்தோனீசியாவில் நடந்த சுதந்திரப் போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களுக்கு நெதர்லாந்து மன்னர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
அப்போது நெதர்லாந்தின் ஆட்சியின்கீழ் இந்தோனீசியா இருந்தது. சுதந்திரப் போராட்டத்தின்போது டச்சுக்காரர் களுக்கும் இந்தோனீசியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டது.
இதுதொடர்பாக இந்தோனீசியாவிடம் நெதர்லாந்து மன்னர் வில்லம் அலெக்சாண்டர் நேற்று மன்னிப்பு கேட்டுக்கொண்டார். தமது மனைவியான நெதர்லாந்து அரசியார் மெக்சிமாவுடன் அவர் இந்தோனீசியாவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவுடன் விழா ஒன்றில் கலந்துகொண்ட பிறகு அவர் இந்தோனீசியர் களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

